ஓ.எம்.ஆரில் வழிப்பறி செய்ய திரு முல்லை வாயிலில் பைக் திருட்டு
செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுாரைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு, 24. கடந்த 20ம் தேதி, ஓ.எம்.ஆர்., குமரன்நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தினேஷ்பாபுவின் மொபைல் போனை பறித்து சென்றனர்.
அப்பகுதி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், அது ‘பல்சர்’ வாகனம் என்பதும், திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடையது என்பதையும் செம்மஞ்சேரி போலீசார் அறிந்தனர். மேலும், அந்த வாகனம் திருடுபோனதாக, 15ம் தேதி, திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் வாலிபர் புகார் அளித்ததும் தெரிந்தது.
இதையடுத்து, கேமராவில் பதிவான இருவரின் அங்க அடையாளங்களை வைத்து விசாரித்ததில், சோழிங்கநல்லுார், காந்தி நகரைச் சேர்ந்த அசோக், 25, அஜித்குமார், 24, வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று, இருவரையும் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
தீவிர விசாரணையில், சோழிங்கநல்லுாரில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட, 40 கி.மீ., துாரத்தில் உள்ள திருமுல்லைவாயில் சென்று, பைக் திருடி வந்தது தெரிந்தது.