நாற்று நட்டு, மாட்டை குளிப்பாட்டி அ.தி.மு.க., நுாதன போராட்டம்
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட நுாம்பல் பிரதான சாலை, 2 கி.மீ., கொண்டது. இங்கு, வணிக நிறுவனங்கள், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த சாலை, பல ஆண்டுகளாக சீரமைக்காமல், குண்டும் குழியுமாக, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். சமீபத்திய மழையில், சாலை முழுதும் வெள்ளம் தேங்கி, புதைக்குழி போல் மாறி உள்ளது.
இந்த சாலையை சீரமைக்க பல முறை புகார் அளித்தும், அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், மூன்று ஆண்டுகளாக சாலையை சீரமைக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நுாம்பல் அ.தி.மு.க., முன்னாள் வார்டு உறுப்பினர் கந்தசாமி தலைமையில், 50க்கும் மேற்பட்ட பகுதிவாசிகள், சாலையில் இறங்கி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சாலையில் தேங்கியுள்ள சேற்றில் நாற்று நட்டு, மாடுகளை குளிப்பாட்டி, பேப்பர் கப்பல் விட்டு நுாதன போராட்டம் நடத்தினர். இதனால், சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.