பணத்தை ஏமாற்றிய ஏட்டுவின் மனைவி , மகளை தாக்கிய பெண்
வடபழனி, சிவன் கோவில் தெருவில் உள்ள காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்லதுரை, 46; கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலர். இவரது மனைவி செல்வி, 43, மகள் மாலினி,20.
கோட்டூர்புரம் துரைசாமி நகரைச் சேர்ந்த 29 வயது பெண், வடபழனி காவலர் குடியிருப்பில் உள்ள செல்லதுரை வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார்.
தன்னிடம், செல்லதுரை பணம் வாங்கியதாகவும் திருப்பி தராமல் அலையவிடுவதாகவும் கூறி, செல்லதுரையின் மனைவி மற்றும் மகளிடம் வாக்குவாதம் செய்து, இருவரையும் அப்பெண் கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.
நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் செல்லதுரை பணிபுரிந்தபோது, அப்பகுதியில் ஒரு பெண்ணிடம் பணத்தை வாங்கி ஏமாற்றிய வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பின், பணிக்கு சேர்ந்து, பணி மாறுதலில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்தார்.
இந்நிலையில், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இருந்து, புதுப்பேட்டை ஆயுதப்படைக்கு செல்லதுரை நேற்று மாற்றப்பட்டுள்ளார். அவரிடம், துறை ரீதியான விசாரணையும் நடக்கிறது.