புழல் ஏரியில் கழிவுநீர் கலப்பதை மறைத்த அதிகாரிகள்
புழல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புழல் ஏரிக்கரை மற்றும் உபரி கால்வாயின் பாதுகாப்பு குறித்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக புழல் ஏரி, 3.3 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. தற்போது, 2.35 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.
இதன் உயரம், 21.20 அடி. தற்போது 16.72 அடி நீர் இருப்பு உள்ளது. மழை காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வினாடிக்கு, 255 கன அடி நீர் வரத்தும், குடிநீர் தேவைக்காக, 209 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தற்போது, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரிக்கரை பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை குறித்து, திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
உபரி நீர் திறக்கப்பட்டால், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், அதிகாரிகளிடம் கலந்துரையாடினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
பொதுமக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. பருவ மழை காலங்களில் ஏரியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். அத்தகைய ஆய்வு தான் இது.
செங்குன்றம் பகுதி வடிநீர் கால்வாய்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்க, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், ஏரி அருகே அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, புழலில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் கால்வாயின் கரைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, ‘ஏரியில் கழிவுநீர் கலப்பு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளதா?’ என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
ஆனால், அதிகாரிகள் உண்மையை சொல்லாமல், கழிவுநீர் கலப்பை அப்படியே மூடி மறைத்தனர்.
ஆய்வின் போது, பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், செங்குன்றம் நாரவாரி குப்பம் பேரூராட்சி அலுவலர் யமுனா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
கழிவுநீர் கலப்பு
புழல் ஏரியில், செங்குன்றம் காந்திநகர், சோழவரம் ஏரியில் இருந்து, புழல் ஏரிக்கு உபரிநீர் பாயும், ஆட்டந்தாங்கல் பேபிகால்வாய், திருமுல்லைவாயல் வெங்கடாச்சலம் நகர் பகுதிகளில், சுற்றுவட்டாரங்களில் இருந்து வெளியேற்றப்படும் மொத்த கழிவுநீரும், புழல் ஏரியில் பாய்கிறது.