செம்மஞ்சேரி கால்வாயில் வெள்ளம் நீரோட்டம் தடைபட்டதால் மக்கள் பீதி ‘
சென்னை, சென்னை புறநகரில், நாவலுார், காரணை, சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட, 35க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், செம்மஞ்சேரி கால்வாய் வழியாக, கடலுக்கு செல்கிறது.
அகலம், 80 முதல் 150 அடி வரை உடைய இந்த கால்வாய், சோழிங்கநல்லுார் – மேடவாக்கம்சாலையை கடந்து செல்கிறது.
இந்த சாலையில், எல்காட் நிறுவனம் அருகே, 100 அடி அகல நீர்வழித்தடத்துடன் கூடிய, சிறுபாலம் அமைக்கப்படுகிறது.
நீரோட்டத்திற்கு தடையாக இருப்பதால், இந்த பணியை மழைக்காலத்தில் செய்ய வேண்டாம் என, அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆனால், ஆங்காங்கே மண் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. இதனால், ஒரு வாரமாக கால்வாயில் செல்லும் தண்ணீர் நிரம்பி, அருகில் உள்ள காலிமனைகளில் தேங்கி நிற்கிறது.
காலி மனைகளில் இருந்து சற்று தொலைவில் குடியிருப்புகள் உள்ளதால், நேற்று முன்தினம் பெய்த மழைநீர், அப்பகுதியை சூழ்ந்து உள்ளது.
குடியிருப்புகளில் வெள்ளம் புகும் அபாயம் உள்ளதால், பகுதிமக்கள் அச்சத்தில் உள்ளனர். நள்ளிரவு மழை வந்தால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என, அஞ்சுகின்றனர்.
செம்மஞ்சேரி கால்வாயில் செல்லும் வெள்ளம், எல்காட் நிறுவனம் கடந்து செல்லும் பாதையில் நீரோட்டம் சீராக உள்ளதா என, அதிகாரிகள் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.