10,000 மீ., ஓட்டத்தில் தன் சாதனையை தானே முறியடித்த எம்.ஓ.பி. மாணவி , மாணவி
சென்னை, சென்னை பல்கலையின், ஏ.எல்., முதலியார் தடகளப் போட்டியில், நேற்று நடந்த, 10,000 மீ., ஓட்டத்தில், தன் சாதனையை தானே முறியடித்து, எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி மாணவி புதிய சாதனை படைத்தார்.
சென்னை பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் ஏ.லட்சுமணசாமி முதலியார் பொன்விழாவை முன்னிட்டு, தடகளப் போட்டி, நேரு விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.
போட்டியில் பல்கலைக்கு உட்பட்ட 550 வீராங்கனையர், 570 வீரர்கள் என, மொத்தம் 1,120 பேர் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட இருபாலருக்கும் தனித்தனியாக, 22 வகையாக விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. போட்டி துவங்கிய நாளில் இருந்தே, மழையையும் பொருட்படுத்தாமல் மாணவ – மாணவியர் சாதனைகளை படைத்து வருகின்றனர்.
அந்தவகையில், நேற்று காலை மாணவியருக்கன, 10,000 மீ., ஓட்டத்தில், எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி மாணவி லதா, பந்தைய துாரத்தை, 37:34.3 நிமிடத்தில் கடந்து, தன் சாதனையை தானே முறியடித்து, புதிய சாதனையை படைத்து அசத்தினார். இவர் கடந்த ஆண்டு, 37:42.27 நிமிடத்தில் கடந்ததே சாதனையாக இருந்தது.
இதேபிரிவில், காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரியின் மாணவி வினிதா, 39:47.7 நிமிடத்தில் கடந்து இரண்டாம் இடத்தையும், ஏ.எம்., ஜெயின் கல்லுாரி மாணவி பிரியதர்ஷினி, 39:51.9 நிமிடத்தில் கடந்து மூன்றாம் இடத்தை பிடித்தனர்.
அதேபோல், 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில், லயோலாவின் ஸ்ரீ ரேஷ்மா, பந்தைய துாரத்தை, 13.9 வினாடியில் கடந்து முதலிடத்தை தட்டிச் சென்றார்.
இரண்டாம் இடத்தை, எம்.சி.சி., மாணவி, 14.4 வினாடியிலும், மூன்றாம் இடத்தை எம்.ஓ.பி., மாணவி, 14.7 வினாடியில் கடந்து கைப்பற்றினர். போட்டிகள் தொடர்ந்து நடக்கிறது.