வண்டலுாரில் குரங்கு குட்டி இறப்பு உடற்கூறாய்வு அறிக்கை தர உத்தரவு

சென்னை, சென்னை வண்டலுார் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த குரங்கு குட்டியின் உடற்கூறாய்வு அறிக்கையை, வனத்துறை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில், நாய்களுக்கு தடுப்பூசி முகாம், கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்தது.

அப்போது, நாய்களால் கடிபட்ட குரங்கு குட்டி ஒன்றை, முகாமில் இருந்த கால்நடை மருத்துவர் வல்லையப்பன் என்பவரிடம், வனத்துறை பாதுகாவலர் ஒப்படைத்தார்.

அவரும், 10 மாதங்கள் குரங்கு குட்டிக்கு சிகிச்சை அளித்தார். மருத்துவரிடம் இருந்த குரங்கு குட்டியை வாங்கிச் சென்று, வண்டலுார் உயிரியல் பூங்காவில், கடந்த மாதம் 26ம் தேதி சேர்த்து விட்டனர்.
குரங்கு குட்டிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்க வாய்ப்புள்ளதால், பூரண குணமடையும் வரை, தன் பராமரிப்பில் ஒப்படைக்க வனத்துறைக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில், வல்லையப்பன் மனு தாக்கல் செய்தார்..

மனு, கடந்த 14ம் தேதி விசாரணைக்கு வந்தது. குரங்கு குட்டிக்கு உரிய சிகிச்சையும், உணவும் அளிக்கப்படுவதாக, வனத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த 20ம் தேதி குரங்கு குட்டி இறந்து விட்டது. இதுகுறித்து, உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன், கால்நடை மருத்துவர் வல்லையப்பன் தரப்பில் முறையிடப்பட்டது. எந்த தொற்றும் பாதிக்காமல் 10 மாதங்கள் சிகிச்சை பெற்ற குரங்கு குட்டி, வண்டலுார் பூங்காவில் சேர்க்கப்பட்டு, 27 நாட்களில் எப்படி இறந்தது எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதையடுத்து, குரங்கு குட்டியின் உடற்கூறாய்வு அறிக்கையை தாக்கல் செய்யும்படி, வனத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 28ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *