பெரும்பாக்கம் குடியிருப்பில் போலீசார் துாய்மை பணி
பெரும்பாக்கம்:மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 30,000 வீடுகள் உள்ளன.
இந்த குடியிருப்பு பகுதியில் அதிக குற்றங்கள் நடப்பதை தடுப்பதற்காக, குடியிருப்புவாசிகளுடன் இணைந்து, போலீசார் பணியாற்றும்படி திட்டம் வகுக்கப்பட்டது.
அதன் ஒருபகுதியாக, குடியிருப்பு வளாகத்தை சுத்தம் செய்யும் பணி நேற்று துவங்கியது. குடியிருப்புவாசிகள், போலீசார் இணைந்து மேற்கொண்ட இப்பணியை, தாம்பரம் மாநகர கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி, எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் ஆகியோர் துவக்கினர்.
துாய்மை பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள், திருநங்கையர், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல அமைப்புகளைச் சேர்ந்தோரும் பங்கேற்றனர்.
சுத்தம் செய்யும் பணியில் 5 பொக்லைன் இயந்திரம், லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., பேசியதாவது:
இங்கு 51 கோடி ரூபாய் செலவில் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு, விரைவில் திறக்கப்பட உள்ளது. காவல் துறையை கண்டு, மக்கள் அச்சப்பட தேவையில்லை.
துாய்மை பணியாளர்கள் நம்முடைய சகோதர்கள் என்பதை உணர்ந்து குப்பை கழிவுகளை உரிய இடத்தில் கொட்ட வேண்டும்.
அரசையோ, நிர்வாகத்தையோ குறை சொல்லாமல் நாம் என்ன செய்கிறோம் என்பதை அறிந்து பொதுமக்களும் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.