‘டெண்டர்’ தாம்பரம் மாநகராட்சியில் 5 வார்டில் 24 மணிநேர குடிநீர் திட்டத்திற்கு விரைவில் அமல்
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில், அனைவருக்கும் சீரான வகையில் குடிநீர் கிடைக்கும் நோக்கத்தில், முதற் கட்டமாக 5 வார்டுகளில் செயல்படுத்தப்பட உள்ள, 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கு, ‘டெண்டர்’ கோரப்பட்டதை அடுத்து, விரைவில் பணிகள் துவங்க உள்ளன.
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளுக்கு, வாலாஜாபாத்தை அடுத்த பழைய சீவரம், மேலச்சேரி, வில்லியம்பாக்கம் பகுதிகளில் பாலாற்று படுகையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, அங்கிருந்து குழாய் வாயிலாக குடிநீர் கொண்டு வரப்பட்டு, வினியோகிக்கப்படுகிறது.
வினியோகம்
மாநகராட்சியில் எஞ்சி உள்ள பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், சிட்லப்பாக்கம், திருநீர்மலை பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மெட்ரோ வாயிலாக குடிநீர் பெறப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
மற்ற பகுதிகளில், உள்ளூர் ஆதாரம் வாயிலாக தண்ணீரை உறிஞ்சி, சுத்திகரிப்பு செய்து வழங்குகின்றனர்.
கோடையில், குடிநீர் வழங்கும் ஏரிகள் வற்றுவதாலும், நிலத்தடி நீர் குறைவதாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதுபோன்ற நேரங்களில், மக்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மூவரசம்பட்டு, திரிசூலம் பகுதிகளில் உள்ள கல்குவாரி தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, பல்லாவரம் மண்டல மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
அடுத்தகட்டமாக, கோடையில், குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க, 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டம், ஒடிசா மாநிலத்தில் சிறப்பான முறையில் செயல்பாட்டில் உள்ளது. அதேபோல், தாம்பரம் மாநகராட்சியிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, முதற் கட்டமாக, 2, 3வது மண்டலங்களில் உள்ள 24,26,22,23,25 ஆகிய ஐந்து வார்டுகள் தேர்வு செய்யப்பட்டு, 18.6 கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தனர். அதற்கான டெண்டர் கோரப்பட்டதை அடுத்து, விரைவில் பணிகள் துவங்க உள்ளன.
பழைய இணைப்பு ‘கட்’
தேர்வு செய்யப்பட்டுள்ள, ஐந்து வார்டுகளில், ஏற்கனவே 10,600 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகள், ஒவ்வொரு இடத்திலும் மாறுபட்டுள்ளன. அதனால், பலருக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கிறது. பலருக்கு குறைவாகவே குடிநீர் வருகிறது.
அனைத்து வீடுகளுக்கும் சீராக குடிநீர் செல்லும் வகையில் குழாய் பதித்து, மீட்டர் பொருத்தப்பட உள்ளது. அப்பணியின்போது, ஏற்கனவே உள்ள, 10,600 இணைப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு, புதிதாக 9,400 இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. 7.4 கி.மீ., துாரத்திற்கு புதிய குழாயும் பதிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
இப்பணிக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. சாந்தி நகர், ராதா நகர் ஆகிய இடங்களில், புதிதாக முறையே, 13,7 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட உள்ளன.
இதற்காக அண்ணா பல்கலை வாயிலாக, மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த முடிவுக்காக காத்திருக்கிறோம். அதேபோல், ஓரிரு நாட்களில் தேவையான உபரகணங்கள் இறக்கப்படும். அதனால், விரைவில் இத்திட்டத்திற்கான பணிகள் துவங்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.