5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை கரையை கடந்து வலுவிழந்தது. எனினும், இன்று ஐந்து மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் மேற்குவங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலை 4:30மணிக்கு சென்னை அருகே கரையை கடந்தது. இது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது.
அதே சமயத்தில், தமிழகத்தில் வட மாவட்டங்களின் மேல் பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்திய வானிலை துறை அறிக்கை: வட கிழக்கு பருவ காற்று காரணமாக, வங்கக் கடலில் அடுத்தடுத்த நிகழ்வுகள் உருவாவதற்கான சூழல் நிலவுகிறது. இது, கடலோர மாவட்டங்களுக்கு மழை கொடுக்க வாய்ப்புள்ளது. வடக்கு அந்தமான் கடல் பகுதியில், வரும் 20ல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால், மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வரும் 22ல் உருவாக வாய்ப்புள்ளது. இது வலுவடைந்து, வட மேற்கு திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.