ஈஷா யோகா மையத்தில் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் தடை
ஈஷா யோகா மையத்தில் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. ஆன்மிக மையத்துக்குள் ராணுவத்தையோ, போலீசாரையோ அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கோவை மாவட்டம், வடவள்ளியை சேர்ந்த காமராஜ்,69 என்பவர் சென்னை ஐகோர்ட்டில், ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது இரு மகள்களையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், கோவை மாவட்ட போலீசார் இதுகுறித்து நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
இதனையடுத்து, கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் மற்றும் சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் அம்பிகா ஆகியோர் தலைமையிலான குழுவினர், ஈஷா யோகா மையத்தில் உள்ள பிரம்மச்சாரிகள் மற்றும் தன்னார்வலர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இன்று (அக்.,03) ஈஷா யோகா மையத்தில் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.