உ.பி. கொடூரம்: ஆன்லைன் ஐ-போன் ஆர்டரை கொடுக்கவந்த டெலிவரி ஏஜென்ட் கொலை
லக்னோ: உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் சுமார் 1.5 லட்சம் மதிப்பிலான ஐ – போனை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த வாடிக்கையாளரின் வீட்டுக்கு அதனைக் கொடுக்கச் சென்ற 30 வயது மதிக்கத்தக்க டெலிவரி ஏஜென்ட் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து இணை ஆணையர் சஷாங்க் சிங் கூறுகையில், “சின்ஹாட்டைச் சேர்ந்த கஜானன் என்பவர், சுமார் 1.5 லட்சம் மதிப்புள்ள ஐ-போனை பிளிஃப் கார்ட் இ வர்த்தக தளத்தில், கேஷ் ஆன் டெலிவரி வசதி மூலம் ( பொருளைப் பெற்றுக் கொண்டதும் பணம் செலுத்தும்) ஆர்டர் செய்திருக்கிறார். செப்.23-ம் தேதி டெலிவரிக்கு வந்த போனை கொடுப்பதற்காக, நிஷ்கந்தைச் சேர்ந்த பாரத் ஷாகு என்ற டெலிவரி ஏஜென்ட், கஜானன் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது, பணம் கொடுப்பதற்கு பதிலாக கஜானனும் அவரது நண்பரும் சேர்ந்து பாரத் ஷாகுவை கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளனர். அவர் இறந்த பின்னர் உடலை சாக்கு மூட்டையில் வைத்துக் கட்டி, அங்குள்ள இந்திரா கால்வாயில் வீசியுள்ளனர்.
வேலைக்குச் சென்ற ஷாகு இரண்டு நாட்களாக வீடு திரும்பாத நிலையில், அவரது குடும்பத்தினர் செப்.25-ம் தேதி ஷாகுவை காணவில்லை என்று சின்ஹாட் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஷாகு யாரிடமெல்லாம் பேசியிருக்கிறார் என அவரது ‘கால் ஹிஸ்டரியை’ போலீஸார் ஆராய்ந்ததில் அவர் கடைசியாக கஜானனிடம் பேசியிருப்பது தெரியவந்தது.
அவரைத் தொடர்பு கொள்ள முயன்று கஜானனின் நண்பர் ஆகாஷிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது ஆகாஷ் அவரும் கஜானனும் சேர்ந்து பாரத் ஷாகுவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரைக் கைது செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள கஜானனைத் தேடிவருகின்றனர்.
இந்த நிலையில், கால்வாயில் வீசப்பட்ட ஷாகுவின் உடலைக் கண்டுபிடிக்க மாநில பேரிடர் மீட்பு படையினரிடம் உதவி கேட்கப்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்தார். இறந்தவரின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொருட்களை டெலிவரி செய்யச் செல்லும் நபர்கள் குறிவைக்கப்படுவது இது முதல் முறையில்லை. முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த கொள்ளை முயற்சி ஒன்றின் போது, டெலிவரி நபர் ஒருவர் கொல்லப்பட்டார். அதேபோல், 2022ம் ஆண்டு நொய்டாவில் பணம் செலுத்தும் தகராறில் டெலிவரி நபர் வாடிக்கையாளரால் குத்திக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.