ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் 3-ம் இடத்துக்கு முன்னேறியது இந்தியா: ஜப்பானை பின்னுக்கு தள்ளியது

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோவி இன்ஸ்டிடியூட் ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. நாடுகளின் பொருளாதாரத் திறன், ராணுவத் திறன், வெளிநாட்டு உறவு, கலாச்சாரம், எதிர்கால வளர்ச்சி அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், முதல் இடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் சீனாவும் உள்ளன. மூன்றாம் இடத்தில் ஜப்பான் இருந்த நிலையில், தற்போது ஐப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 3-வது இடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் 4-வது இடத்தில் ஜப்பான், 5-வது ஆஸ்திரே லியா, 6-வது இடத்தில் ரஷ்யா, 7-வது இடத்தில் தென் கொரியா, 8-வது சிங்கப்பூர், 9-வது இடத்தில் இந்தோனேசியா, 10-வது இடத்தில் தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. தற்போது இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக உள்ளது. தொழில்நுட்பம், உற்பத்தி, சேவைத் துறை ஆகியவை இந்தியாவில் வளர்ச்சி அடைந்து வருகின்றன.
இந்தியா அதன் ராணுவக் கட்டமைப்பை நவீனப்படுத்தி வருகிறது. குறிப்பாக, அணுசக்தி, நவீன ரக ஏவுகணை, வலுவான கடற்படை ஆகியவை இந்தியாவை ராணுவ ரீதியாக முக்கியத்துவமிக்க நாடாக மாற்றியுள்ளது. இந்தியா உலக நாடுகளுடனான தனது உறவை வலுப்படுத்தி வருகிறது. ஐநா, ஜி20, பிரிக்ஸ், குவாட் என சர்வதேச அமைப்புகளில் இந்தியா முக்கிய இடம் வகிக்கிறது. விண்வெளி ஆராய்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரி ஆற்றல் கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றிலும் இந்திய வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3-ம் இடம் பிடித்துள்ளது.

கரோனாவுக்குப் பிறகு இந்தியா வேகமாக மீண்டெழுந்தது இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சியைக் காட்டுவதாக லோவி இன்ஸ்டிடியூட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இளைய தலை முறையினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு இது முக்கிய காரணியாக கூறப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியாவின் முன் பல்வேறு சவால்கள் உள்ளன. பொருளாதார ரீதியாக இந்தியாவில் தீவிர ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. போக்குவரத்து, சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் இன்னும் மேம்பட வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் வளர்ச்சி குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடம் பிடித்துள்ளது. மோடி இல்லையென்றால், இந்த வளர்ச்சி சாத்தியமாகி இருக்காது. முந்தைய அரசின் ஆட்சியில் இந்தியா இலக்கற்று இருந்தது” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *