தேனி: அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; போலீஸ் விசாரணை

சின்னமனூர்: தேனி மாவட்டம் சின்னமனூரில் அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுகுறித்து எஸ்பி.சிவபிரசாத் நேரில் விசாரணை நடத்தினார்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அதிமுக நகரச் செயலாளர் பிச்சைக்கனி. இவர் காந்தி சிலை அருகே உத்தமபாளையம் சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது அலுவலகமும் வீடும் ஒரே வளாகத்திலேயே உள்ளது.

இந்நிலையில் இன்று (செப்.24) அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் ஒரு குண்டு மட்டும் தீப்பற்றியுள்ளது மற்றவை தீ பற்றாமல் ஆங்காங்கே உடைந்து சிதறி உள்ளது.

சத்தம் கேட்டு காவலாளி மாரியப்பன் கேட்டை திறந்து வெளியே வந்துள்ளார். இதனால் டூவீலரில் இருந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதனைத் தொடர்ந்து பிச்சைக்கனி சின்னமனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், சின்னமனூர் நகராட்சி அதிமுக கவுன்சிலர் உமாராணி என்பவரது மகன் வெங்கடேசன் தொடர்ந்து தன்னிடம் பிரச்சினை செய்து வருகிறார். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதால் வெங்கடேசனும், உமாராணியும் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். இந்த முன்விரோதத்தால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்று அவர் போலீஸில் தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத் நேரில் விசாரணை நடத்தினார். இதில் மதுபாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி வெடிக்கச் செய்தது தெரிய வந்தது. இதில் இரண்டு பாட்டில்கள் வெடித்த நிலையில் மற்றவை வெறுமனே சுவரில் பட்டு உடைத்துள்ளது.

காவலாளி மாரியப்பனிடம் விசாரித்த போது டூவீலரில் வந்திருந்தவர்கள் முகத்தை துணியால் மறைத்திருந்தனர். அவர்களை விரட்டிப்பிடிப்பதற்குள் வேகமாக சென்றுவிட்டனர் என்று தெரிவித்தார்.

இது குறித்து கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

அரசியல் பிரச்சினையால் இச்சம்பவம் நடந்ததா வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து சின்னமனூர் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *