துரைப்பாக்கத்தில் இளம்பெண்ணை கொன்று சடலத்தை சூட்கேஸில் வைத்து வீசிய இளைஞர்: போலீஸில் சிக்கியது எப்படி?

சென்னை: இளம்பெண்ணைக் கொன்று, உடலை சூட்கேஸில் அடைத்துவீசிய இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் கொளத்தூர் தாலுகாவைச் சேர்ந்தவர் தீபா (30). திருமணமாகாத இவர், சென்னை மாதவரம், பொன்னியம்மன்மேட்டில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 17-ம்தேதி வெளியே சென்ற தீபா, பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, தீபா பயன்படுத்திய செல்போனின் லொகேஷன் துரைப்பாக்கத்தில் உள்ள குமரன் குடில் பகுதியைக் காட்டுவதை அறிந்த அவரது தம்பி வீரமணி,அங்கு சென்று தேடிப் பார்த்தும், சகோதரி தீபாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் வீரமணி புகார் அளித்தார்.

இதற்கிடையில், குமரன் குடில் பிரதான சாலையில் ரத்தக்கறை படிந்த சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. இதுகுறித்து, அப்பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த மாரி என்பவர், துரைப்பாக்கம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்து வந்த துரைப்பாக்கம் போலீஸார், சூட்கேஸை திறந்து பார்த்தபோது இளம்பெண் ஒருவரின் உடல் சூட்கேஸில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில், அது மாயமானதாக புகார் அளிக்கப்பட்ட தீபாவின் உடல் என்பது தெரியவந்தது. இதையடுத்து, உடலை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலை தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியில் உள்ளகண்காணிப்புக் கேமரா பதிவுகள்,தீபாவின் செல்போன் அழைப்புகளின் விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில், துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகர் 4-வது தெருவில் வசித்து வந்த, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (22) என்பவர் தீபாவைக் கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
தீபாவை கொலை செய்தது குறித்து மணிகண்டன் போலீஸில்அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நான் அக்கா வீட்டில் 3 மாதங்களாக தங்கி, பெருங்குடியில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். அக்காகுடும்பத்தினர் சில தினங்களுக்கு முன் பொன்னமராவதி சென்றனர். நான் தனியாக இருந்தேன். அப்போது ஒரு செல்போன் செயலி மூலம் தீபாவைத் தொடர்பு கொண்டு பேசினேன். என்னுடன் தனிமையில் இருக்க அவர் ரூ.6 ஆயிரம் தருமாறு கேட்டார். நான் மறுக்கவே, ரூ.4 ஆயிரத்துக்கு சம்மதித்தார்.

தொடர்ந்து, கடந்த 17-ம் தேதி இரவு துரைப்பாக்கத்தில் நான் வசித்த வீட்டுக்கு தீபாவை இரவு 9.30 மணிக்கு வரவழைத்து, அவருடன் தனிமையில் இருந்தேன். பின்னர் தீபா என்னிடம், ரூ.12 ஆயிரம் தருமாறு வலியுறுத்தினார். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று நான் கூறியதையடுத்து, எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. என்னுடன் தனிமையில் இருந்ததை வெளியே சொல்லி விடுவேன் என்று தீபா மிரட்டியதால் ஆத்திரமடைந்த நான், அங்கு கிடந்த சுத்தியலால் அவரது தலையில் ஓங்கி அடித்தேன். இதில் பலத்த காயமடைந்த தீபா, அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் ஆன்லைன் மூலம் பெரிய அளவிலான சூட்கேஸை வாங்கி, அதில் தீபாவின் உடலை மடக்கி வைத்து, நேற்றுமுன்தினம் நள்ளிரவு எனது வீட்டிலிருந்து சிறிது தூரம் தள்ளியிருந்த பகுதியில், சூட்கேஸை வைத்துவிட்டு, அங்கிருந்து வந்துவிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *