பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் இருவர் சஸ்பெண்ட்
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அரசு உதவிபெறும் தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பள்ளியில் திருநெல்வேலி மாநகரப் பகுதிகள் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்நிலையில், பள்ளியில் நிரந்தரப் பணியில்உள்ள ஆசிரியர் ஒருவரும், தற்காலிக ஆசிரியர் ஒருவரும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார்கள் எழுந்தன.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தி, தகவல் தெரிவிக்குமாறு உளவுத்துறையினருக்கு காவல் துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டனர். மேலும், மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே, 7-ம் வகுப்புமாணவர்களுக்கு பாலியல் ரீதியான தொல்லை அளித்ததாக பள்ளி ஆசிரியர் ராபர்ட் மற்றும்தற்காலிக ஆசிரியர் நெல்சன் ஆகியோர் நேற்று பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளதாக, மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார். மேலும், மாணவர்களின் பெற்றோரிடம் இதுகுறித்து விசாரித்துவிட்டு, அவர்கள் புகார் அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.