ஆங்கில பேராசிரியர், மொழி பெயர்ப்பாளர் செல்லப்பன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

சென்னை: ஆங்கில பேராசிரியரும் சிறந்த மொழி பெயர்ப்பாளருமான கா.செல்லப்பன் நேற்று காலமானார். அவருக்கு வயது 88. அம்பத்தூரில் உள்ள இல்லத்தில், நேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றது.

இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆங்கிலப் பெரும் பேராசிரியரும் தலைசிறந்த மொழிபெயர்ப்பாளரும் ஒப்பிலக்கியத்தின் திறனாய்வுச் சுடராகவும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் ஆங்கில இலக்கியத் துறையில் மங்காப் புகழ் கொண்டவராகவும் விளங்கிய பேராசிரியர் கா.செல்லப்பன் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்த முற்றேன். அவரது மறைவு தமிழ், ஆங்கில இலக்கிய உலகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் ஆசிரியப் பணியைத் தொடங்கி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கியத் துறையின் தனிப்புகழ்த் தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் செல்லப்பன், ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை பெற்றவர். எண்ணற்ற ஒப்பியல் நூல்களை எழுதியவர், மொழி பெயர்த்தவர். நான்கு தலைமுறைகளை உருவாக்கியவர்.

தமிழகத்தில் முதன்முறையாக இங்கிலாந்து, அமெரிக்க நாட்டு ஆங்கில கவிஞர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய நாட்டுக் கவிஞர்களை அறிமுகம் செய்த பெருமை இவரையே சாரும். ஷேக்ஸ்பியரையும் இளங்கோவடிகளையும் ஒப்பியல் செய்து பெரும் படைப்பினைப் படைத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் குறளோவியம், தென்பாண்டிச் சிங்கம், மீசை முளைத்த வயதில் ஆகிய நூல்களையும் பாரதியார், பாரதிதாசன் பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சிறப்புக்கு உரியவர். ரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா’ நாவல் மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றவர்.

மேலும் தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக 2006-ம் ஆண்டுக்கான பாரதிதாசன் விருதையும், 2016-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதையும் பெற்றவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மாணவர்களுக்கும், அறிவுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *