ஆவடி சி.ஆர்.பி.எப். வளாகத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

ஆவடி சி.ஆர்.பி.எப். அலுவலக வளாகத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ.) ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலையில் மழை பெய்ததால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது.

அதிகாலை 3.40 மணியளவில் மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி அந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார். பின்னர் உள்ளே சென்ற மர்மநபர், கையில் இருந்த கடப்பாரையால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது சி.ஆர்.பி.எப். வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர், ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் சத்தம் கேட்டு அங்கிருந்து டார்ச் அடித்ததுடன், சத்தம் போட்டார்.

இதனால் பயந்துபோன மர்ம நபர், கடப்பாரையை அங்கேயே போட்டுவிட்டு கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டார்.

அதேநேரத்தில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள அந்த வங்கியின் அலுவலகத்தில் இருந்தபடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுபாஷினி என்பவர், சி.ஆர்.பி.எப். வளாகத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் மர்மநபர் கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டு, உடனடியாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். இரவு நேரம் என்பதாலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததாலும் அப்பகுதியில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் மர்ம நபரின் உருவம் சரியாக தெரியவில்லை.

ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இதுபற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டதால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.4 லட்சம் தப்பியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *