ரிலையன்ஸ், டைட்டன், ரேமண்ட்: ரீடெயில் பிரிவில் பறிபோன 52,000 வேலைவாய்ப்புகள்
புதுடெல்லி: நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ரீடெயில் பிரிவு உள்ளது. இந்த நிலையில், விற்பனையில் மந்தநிலை காரணமாக கடந்த 2023-24 நிதியாண்டில் 52,000 வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன.
குறிப்பாக, லைப்ஸ்டைல், மளிகை மற்றும் விரைவு – சேவை உணவகங்களில் 26,000 பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அப்பிரிவுகளில் வேலை செய்யும் மொத்த பணியாளர் எண்ணிக்கை 4,55,000-லிருந்து கடந்த நிதியாண்டில் 4,29,000-ஆக குறைந்துள்ளது. ரிலையன்ஸ் ரீடெயில், டைட்டன்,ரேமண்ட், பேஜ், ஸ்பென்சர்களில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை 17 சதவீதம் அல்லது 52,000 குறைந்துள்ளது.
2022 தீபாவளிக்குப் பிறகு, நுகர்வோர்கள் அவசியமில்லாத செலவுகளை வெகுவாக குறைத்துள்ளனர். குறிப்பாக, ஆடைகள், லைப்ஸ்டைல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்குவதை தவிர்த்துள்ளனர். இதனால், சில்லறை விற்பனை வளர்ச்சி 4 சதவீதமாக குறைந்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஸ்டார்ட்அப் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள வேலை இழப்பும் ரீடெயில் விற்பனையை மந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. பல நிறுவனங்கள் தங்களது விரிவாக்க நடவடிக்கைகளை தாமதப்படுத்தி வருகின்றன. இதனால், முக்கிய 8 நகரங்களில் 2023-ல் 7.1 மில்லியன் சதுர அடியாக இருந்த இடத்துக்கான தேவை 2024-ல் 6-6.5 மில்லியன் சதுர அடியாக குறையும் என ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான சிபிஆர்இ தெரிவித்துள்ளது.