ராஜஸ்தானின் சிகர் நகரில் 4,200 மாணவர்கள் நீட் தேர்வில் 600 மதிப்பெண் பெற்றது எப்படி?
புதுடெல்லி: கடந்த மே 5-ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின்போது வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து தேர்வு மையங்கள், நகரங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு (என்டிஏ) உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதன்படி நேற்று முன்தினம் மையங்கள், நகரங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் என்டிஏ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ராஜஸ்தானின் சிகர் நகரில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் சுமார் 27,000 மாணவ, மாணவியர் நீட் தேர்வை எழுதினர். இதில் 2,000-க்கும் மேற்பட்டோர் 650-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
குஜராத்தின் ராஜ்கோட் நகர தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதியவர்களில் 22,701 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 12 பேர் 700-க்கும் அதிகமாக மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 259 பேர் 600-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் அலகாபாத், கேரளாவின் கோட்டயம் நகர தேர்வு மையங்கள், ஹரியாணாவின் பஹதுர்கர் நகரின் ஹர்தயால் பப்ளிக் பள்ளி தேர்வு மையம் ஆகியவற்றின் முடிவுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளன என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.