அரசு பள்ளி அவமானத்தின் அடையாளமா?…ஏன் இந்த மனோபாவம்?… தவறான புரிதலா? மாற்றுவாரா மந்திரி?
அரசு பள்ளி அவமானத்தின் அடையாளமா?…
மக்களுக்கு ஏன் இந்த மனோபாவம்?…கல்வியின் தரம் குறைவா? தவறான புரிதலா? மாறுமா இந்த மனோபாவம்? மாற்றுவாரா மந்திரி
காமராஜர் எனும் கல்வி மேதை…..
அரசு பள்ளி, ஒரு காலத்தில் கல்லாதவர் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்று காமராஜர் என்னும் மாமேதை உருவாக்கிய அற்புத படைப்பு. ஒரு அரசன் தெளிவாக இருந்தால் நாட்டை அறிவார்ந்த சமூகமா மாற்ற அவன் முதலில் சிந்திப்பது கல்வி எனும் மகா அறிவு ஆயுதம் . அதை எனக்கு தெரிந்த வகையில் முறையாக சிந்தித்தது காமராஜர் என்ற ஒற்றை முதல்வர் தான். தமிழகம் இன்று பெரும்பாலும் கல்வி சார்ந்த சமூகமா மாற முக்கியமானவர் காமராஜர் தான்.
அந்த காமராஜர் உருவாக்கிய விதை விருட்சமாக வளர்ந்து இன்று ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி ஆழமாக வேரூன்றி இருக்கிறது. இது நிச்சயம் நல்ல வெற்றி தான் தமிழகத்திற்கு.
ஆனால் அந்த படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது சில கல்வி வியாபாரிகளுக்கு நன்றாக தீனி போடும் விருட்சமாக வளர்ந்து நிற்பதுதான் வேதனை.
அரசு பள்ளிகளில்
நன்றாக படித்த தேர்வு செய்யப்பட்ட திறமையான ஆசிரியர்கள், அரசின் நிதி பெருமளவு கல்விக்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால் தரம் இல்லை என்ற எண்ணம் மக்களிடம் உருவாகி, தற்போது இந்த இருபது வருடங்களில் அதிகமாக இருக்கிறது. அந்த எண்ணத்தை யாரும் மறுக்க முடியாது.
எம். ஜி.ஆர். கால கல்வி மாற்றம்…
காமராஜர் கால அரசியலுக்குப் பின் கருணாநிதி அதன் பின் எம். ஜி.ஆர் என மாறிய நேரம்.
எம். ஜி.ஆர் பதவிக்கு வந்த நேரத்தில் அவரிடத்தில் பொறியியல் படிக்க கர்நாடக அரசுக்கு நிறைய சிபாரிசு கேட்டுக் கட்சிக்காரர்கள் வந்தார்கள். உடனே பார்த்த எம். ஜி.ஆர் நாம் ஏன் பொறியல் கல்லூரி ஆரம்பிக்க கூடாது என்று கேட்டார். அப்போது அரசிடம் நிதி பற்றாக்குறையாக இருக்க உடனே தன்னுடன் இருந்த கட்சிக்காரர்களை வைத்து
ஆரம்பித்தார்.அது ஆரம்பத்தில் சேவையா வந்தது. பின்னாளில் மிக பெரிய வியாபாரம் ஆனது. அந்த வியாபாரம் இப்போது மெல்ல மெல்ல வளர்ந்து மிகப்பெரிய கல்வி அரக்கனா மாறி விட்டது. கல்வி அரக்கர்கள் ஆரம்பிச்ச சாராய வியாபாரத்தை அரசு நடத்த ஆரம்பித்து விட்டது…
கல்லூரி முதல் பள்ளிக்கூடம்….
கல்லூரிகள் லாபம் பார்த்த கல்வி அரக்கர்கள், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிகூட படிப்பில் கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அது இப்போது பலப் பெண்களின் தாலியை அடமானம் வைக்கும் சூழலுக்கு கொண்டு வந்து விட்டார்கள்…
அரசு சாராயம் விற்று பெண்களின் தாலியை அறுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதுக்கு கள்ளகுறிச்சி சம்பவம் ஒரு உதாரணம். உடனேயே வழக்கு போடலாம் யோசிக்காதிங்க. மது அருந்த கூடாது என்னும் விழிப்புணர்வு கொடுக்க வேண்டிய அரசாங்கம் நல்ல விலைக்கு அதிகமாக விற்கிறார்கள். அந்த விலைக்கு வாங்க முடியா மக்களை மலிவா கள்ளசாரயம் சிலர் விற்க, அதுக்கு சில அரசு அதிகாரிகள் உடைந்தையாக இருக்க, இப்ப பலர் பேர் தாலி போனதுக்கு அரசும் ஒரு காரணம் தான் என்று சொல்லவரேன்.
பள்ளிகூட வியாபாரம்…
பெரிய பணக்கார வீட்டு பிள்ளைகள் படிக்க ICSE பாட முறை..அதை விட கொஞ்சம் பணக்காரங்க மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் இவங்க படிக்க வைக்க CBSE பாட முறை. அதை விட கொஞ்சம் நடுத்தர மக்கள் படிக்க Matric பாட முறை. இப்ப ஏழைகள் படிக்க அரசு பள்ளியில State board பாட முறை. இந்த பாகுபாடு கல்வி முறை பல கேள்விகளை நம் முன் வைக்கிறது. இந்த பாகுபாடு தனியார் பள்ளிகள் அதிகம் வளர காரணம். அரசாங்க பள்ளிகள் சம்பாரிக்க வழி இல்லாதவன் படிக்க வைக்க ஒரு இடம் என்ற மன நிலை எல்லாரிடமும் உருவாகி இருக்கு. அந்த மன நிலையை மாத்த அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். ஒரே கல்வி ஒரே தரம் இருக்கணும். கல்வியில் ஏற்ற தாழ்வு இருக்க கூடாது.