கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு 57 ஆக உயர்வு: சட்டவிரோதமாக மெத்தனால் விற்றவர் சென்னையில் கைது
சென்னை: சாராய வியாபாரிகளுக்கு சட்ட விரோதமாக மெத்தனால் விற்பனை செய்ததாக சென்னையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிற்சாலை உரிமையாளரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து தமிழக காவல்துறையின் சிபிசிஐடி பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாராயத்தில் விஷத்தன்மை கொண்ட மெத்தனால் ரசாயனப் பொருள் அதிக அளவு கலக்கப்பட்டதே உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என தெரியவந்தது.
இதையடுத்து, சட்ட விரோதமாக மெத்தனால் விற்பனை செய்தவர்கள், கள்ளச் சாராயம் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள், இடைத் தரகர்கள், பின்னணியில் உள்ளவர்கள் குறித்து உள்ளூர் போலீஸார், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாருடன் இணைந்து சிபிசிஐடி போலீஸார் துப்பு துலக்கி வருகின்றனர். இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மெத்தனால் விற்பனை தொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்ட மாதேஷ் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில்,சென்னை புழல் வடபெரும்பாக்கம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் மதுரவாயலை சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம் இருந்தும் கள்ளக்குறிச்சிக்கு மெத்தனால் அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
சென்னை எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் பதுங்கி இருந்த அவரை, சென்னை போலீஸார் உதவியுடன் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி கந்தசாமி தலைமையிலான போலீஸார் நேற்று அதிகாலை கைது செய்தனர். பின்னர்,அவரை சிபிசிஐடி பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மெத்தனால் மற்றும் டர்பன்டைன் எண்ணெய் ஆகியவற்றை சாராய வியாபாரிகளுக்கு அவர் சட்ட விரோதமாக விற்று வந்தார் என தெரியவந்தது.
இதுகுறித்து விசாரிப்பதற்காக, வட பெரும்பாக்கத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலைக்கு போலீஸார் சென்றனர். ஆனால், தொழிற்சாலை பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, தொழிற்சாலை உரிமையாளரை போலீஸார் தொடர்பு கொண்டு விசாரித்தனர். விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவரை அறிவுறுத்தி உள்ளனர்.
கள்ளச் சாராய உயிரிழப்பு 57 ஆக உயர்வு: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சிலர் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்துள்ளனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று வரை கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மொத்தம் 220 பேர் சேர்க்கப்பட்டனர்.
இதில் நேற்று இரவு வரை கள்ளக்குறிச்சியில் 32, சேலத்தில் 18, விழுப்புரத்தில் 4, புதுச்சேரி ஜிப்மரில் 3 பேர் என 57 பேர் உயிரிழந்தனர். இதில் 5 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை. 55 பேரின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி ஜிப்மரில் இருந்து 5 பேர், கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் இருந்து ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று மாலை நிலவரப்படி, கள்ளக்குறிச்சியில் 111, சேலத்தில் 30, விழுப்புரத்தில் 4, புதுச்சேரி ஜிப்மரில் 12 பேர் என மொத்தம் 157 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.