காசா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: 14 குழந்தைகள் உட்பட 40 பேர் பலி
டெல் அவிவ்: காசாவில் ஐ.நா நடத்தும் பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 குழந்தைகள், 9 பெண்கள் உட்பட 40 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல மாதங்களாக போர் நடந்து வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், காசாவில் ஐ.நா நடத்தும் பள்ளியின் மீது இஸ்ரேல் இன்று (வியாழன்) நடத்தியத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். இதில் 14 பேர் குழந்தைகள் என்றும் 9 பேர் பெண்கள் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 68 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 235 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. சிகிச்சைக்காக காசா பகுதியை விட்டு வெளியேற வேண்டிய நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 25,000 ஐ எட்டியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதோடு குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பலரும் பட்டினியில் சிக்கித் தவிப்பதாகவும் கூறப்படுகிறது.
காசா போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் உலக நட்பு நாடுகள் கூட்டறிக்கையை வெளியிட்டன. அதில் அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரேசில், பல்கேரியா, கனடா, கொலம்பியா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, செர்பியா, ஸ்பெயின், தாய்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் அடங்கும். போர் நிறுத்தத்துக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் முரண்டு பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 36,654 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 83,309 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸின் தாக்குதல்களால் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது.