சாமானியன் விமர்சனம்
தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையடிக்க இளைஞர் கும்பல் ஒன்று முயற்சிக்கிறது. அப்போது வங்கிக்கு வரும் சாமானியன் ராமராஜன், திடீரென்று டைம் பாம், துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் காட்டி, வங்கியின் மேனேஜர் போஸ் வெங்கட் உள்பட அனைவரையும் மிரட்டி பணிய வைக்கிறார். வங்கியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அவர், தன்னைக் கைது செய்ய முயற்சிக்கும் காவல்துறைக்கு 3 கோரிக்கைகள் விடுக்கிறார்.
இச்சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மீடியாவிலும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. வங்கியை யும், அங்குள்ளவர்களையும் மீட்க சாமானியன் வைக்கும் கோரிக்கைகளை காவல்துறை ஏற்றதா? சாமானியன் யார், அவர் ஏன் வங்கியை கொள்ளை யடிக்க முயற்சித்தார் என்பது மீதி கதை.
12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாகியுள்ள ராமராஜன், தனது வழக்க மான ஸ்டைலை விட்டுவிட்டு, இன்றைய ஆக்ஷன் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகை யில் நடித்துள்ளார். தனது மகள் நக்ஷா சரண் மீது காட்டும்
பாசமும், பிறகு அவரது பிரச்னைகளை அறிந்து வெளிப்படுத்தும் சோகமும், வங்கி மீது காட்டும் கோபமும் வேறொரு தளத்தில் வெளிப்பட்டு, அவரது ரசிகர்களை திருப்திபடுத்தி இருக்கிறது. இளையராஜா இசையில் ‘செண்பகமே… செண்பகமே…’ என்ற பாடலுக்கு மீண்டும் அவரே நடிக்கும்போது, தியேட்டரில் உற்சாகம் பீறிடுகிறது.
சமூக விரோதிகளை எதிர்க்கும் ராமராஜனுக்கு உதவியாக இருக்கும் ராதாரவியும், எம்.எஸ்.பாஸ்கரும் தங்கள் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர். ராமராஜனை பேட்டி எடுக்கும் அபர்னதி, கட்டுமான நிறுவனர் மைம் கோபி மற்றும் போஸ் வெங்கட், கே.எஸ்.ரவிகுமார், வினோதினி வைத்தியநாதன், தீபா சங்கர், ஸ்மிருதி வெங்கட், கஜராஜ் ஆகியோர் மனதில் பதிகின்றனர். சொந்த வீடு ஆசையிலும், பிறகு அதைப் பறிகொடுத்த விரக்தியிலும் லியோ சிவ
குமார், நக்ஷா சரண் ஜோடி இயல்பாக நடித்து மனதை உருக வைத்திருக்கிறது.
23 வருடங்களுக்குப் பிறகு ராமராஜன் படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். ராமராஜனுக்கு டூயட் இல்லை, ஜோடி இல்லை. ஆனால் மகளுக்கும், பேத்திக்குமான பாடலை அவர் பாடி இவர் நடிக்க, கேட்கவும் மற்றும் பார்க்கவும் இதமாக இருக்கிறது. சி.அருள் செல்வனின் கேமரா, காட்சிகளை யதார்த்தமாகப் படமாக்கியுள்ளது. சொந்த வீடு வாங்க லோன் கேட்டு வங்கிக்கு செல்பவர்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், அவர்களுக்கு நடக்கும் அநீதிகளையும் சுட்டிக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய இயக்குனர் ஆர்.ராகேஷ், காட்சிகளை இன்னும் அழுத்தமாகச் சொல்லி, லாஜிக்கிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.