எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் வைப்பு – சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல்…!

நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கி விட்டது. 3வது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக திட்டம் தீட்டி வருகிறது. அதேவேளை, இந்த முறை பாஜகவை வீழ்த்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி வருகின்றன.
காங்கிரஸ் தலைமையில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன. பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் கடந்த மாதம் 23-ம் தேதி பாட்னாவில் முதல் கூட்டத்தை நடத்தின.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் பெங்களூருவில் நேற்று முன் தினம் தொடங்கியது. முதல் நாளில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இரவு உணவு விருந்தளித்தார். இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (Indian National Developmental Inclusive Alliance – INDIA) என பெயரிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி – UPA’ என பெயரிடப்பட்டிருந்த நிலையில் அந்த பெயர் தற்போது ‘இந்தியா’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA)-யின் பெயர் மாற்றப்படவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி என்பதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். அதில், (என்) N – புதிய இந்தியா (New India), (டி) D – வளர்ந்த நாடு (Developed Nation), (ஏ) A – மக்களின் ஆசை (Aspiration of People) என விளக்கம் அளித்துள்ளார். மேலும், தங்கள் கூட்டணியில் 38 கட்சிகள் உள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி வலிமையடைத்து வரும் நிலையில் ஆட்சியை தக்க வைக்க பாஜக தங்கள் கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *