கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வன்முறையில் ஈடுபட்ட 329 பேர் அதிரடி கைது

சின்னசேலம் அருகே சேலம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் பள்ளியில், கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா, பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார்.

இவர் கடந்த 13ம் தேதி அதிகாலை விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை தகவல் வெளியானது. அந்த மாணவியின் தாய் செல்வி புகாரின்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கோஷமிட்டவாறு பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது. பள்ளி வளாகத்துக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் பேரிகார்டு மூலம் தடுத்து நிறுத்தினர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது, போராட்டக்காரர்கள் போலீசாரை கல்வீசி தாக்கினர். இதனால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீஸ் வேனுக்கு தீ வைத்தனர். மேலும் ஆத்திரம் அடங்காத போராட்டக்காரர்கள் பள்ளி முன்பு நின்றிருந்த போலீஸ்காரர்களை தள்ளிவிட்டு பள்ளிக்குள் நுழைந்து வளாகத்தில் நிறுத்தியிருந்த பள்ளி பஸ்கள், கார், டிராக்டர், பொக்லைன் இயந்திரம் உள்ளிட்டவைகளை தீவைத்து எரித்தனர்.

பின்னர் வகுப்பறைகளுக்குள் புகுந்து ஸ்மார்ட் போர்டு, கணினி, பெஞ்ச், சேர் ஆகியவற்றையும் நொறுக்கினர். பள்ளி கட்டிடத்திற்கும் தீவைத்தனர். இதில், பல வகுப்பறைகள் தீக்கிரையாயின. பள்ளி அலுவலகத்தில், வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் சான்றிதழ்களும் தீக்கிரையானதாக கூறப்படுகிறது. பள்ளி கேட், அலங்கார வளைவு ஆகியவற்றையும் உடைத்து சேதப்படுத்தினர்.

இந்நிலையில், கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சின்னசேலம், நயினார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்கு உள்ளான பள்ளியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் , முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்த நிலையில், மேலும் 2 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது 15க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *