ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.

 

சென்னை,

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பணம் குடும்ப தலைவிகளுக்கு எப்போது கிடைக்கும் என்று எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பி வந்தன.

குடும்ப தலைவிகளும் மாதம் ரூ.1000 எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். இதற்காக இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், குடும்ப தலைவிகளும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளார். இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த கூட்டத்தில் குடும்ப தலைவிகளில் யார்-யாருக்கு ரூ.1000 வழங்க முடியும் என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுப்படுத்த உள்ளார்.

இந்த கூட்டத்தில் அனைத்து கலெக்டர்களும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தாசில்தார்கள், ஆர்.டி.ஓ.க்கள்-போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகராட்சி, நகராட்சி, ஆணையர்கள், கூடுதல் கலெக்டர்கள், காணொலி வாயிலாக கூட்ட அரங்கில் அமர்ந்து முதல்-அமைச்சர் பேசுவதை கவனிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் கூட்டத்தில் குடும்பத் தலைவிகள் யார்-யாருக்கு ரூ.1000 உதவித்தொகை கிடைக்கக்கூடும் என்பதை அறிந்து கொள்ள முடியும். இதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டத்தில் அறிவுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *