வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போகுமா..?

வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போகுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

சென்னை, 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஏற்கனவே ஒருமுறை மாற்றப்பட்டு வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா? கல்வித்துறை பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை எதுவும் வெளியிடுமா? என்ற எதிர்பார்ப்பில் சமூக வலைதளங்களில் பலரும் பல விதமான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘இதுவரை அப்படி எந்த முடிவையும் கல்வித்துறை சார்பில் எடுக்கப்படவில்லை. அதுபற்றி முடிவு எடுப்பதற்கு முன்பு கல்வித்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் ஆலோசனை நடத்துவார். அதன்பின்பு அவர் முதல்-அமைச்சருடன் கலந்தாலோசிப்பார். அதற்கு பிறகுதான் பள்ளிகள் திறப்பு தாமதம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்’ என்று தெரிவித்தனர்.
இந்த வகையில் பார்க்கும்போது கல்வித்துறை பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடுவதற்கு இதுவரை திட்டங்கள் எதுவும் தீட்டவில்லை என்பது தெரியவருகிறது. இன்றோ (திங்கட்கிழமை) அல்லது நாளையோ (செவ்வாய்க்கிழமை) ஏதாவது அவசர முடிவுகள் எடுத்து அறிவித்தால் மட்டுமே பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *