ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா; சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்படும்!!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைப்பது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பலர் தங்களது இன்னுயிரை மாய்த்து வருகிறார்கள். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். திருப்பி அனுப்பிய கவர்னர் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக கடந்த ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி அனுப்பி வைக்கப்பட்டது. பல நாட்களாக கிடப்பில் போடப்பட்ட அந்த மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் திடீரென தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சரவை கூட்டம் தமிழக சட்டசபை வருகிற 20-ந்தேதி கூடுகிறது. இதனையொட்டி தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் துரைமுருகன், நேரு, பொன்முடி உள்ளிட்ட அனைத்து அமைச் சர்களும் பங்கேற்றனர்.
மாலை 5.15 மணிக்கு தொடங்கிய அமைச்சரவை கூட்டம் மாலை 6.30 மணிக்கு நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில், தமிழக அரசின் பட்ஜெட் மற்றும் புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படும் தொழில்கள், விரிவாக்கம் செய்யப்படும் தொழில்கள் ஆகியவற்றுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமைச்சர் பேட்டி மேலும், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியால் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா திருப்பி அனுப்பியது குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவை, சட்டசபை கூடும் போது மீண்டும் நிறைவேற்றி மீண்டும் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி வருமாறு:- அதிகாரம் உண்டு இணையவழி சூதாட்டங்களை தடை செய்தல், இணையவழி விளையாட்டுகளை முறைப்படுத்துதல் தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதிலுள்ள சந்தேகங்களை கவர்னர் கேட்டபோது அதற்கான விளக்கத்தை அளித்திருந்தோம்.
ஆனால் அந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறி சட்ட மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். ஆனால் சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தவரும் அவர்தான். ஏற்க முடியாது கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இயற்றப்பட்ட அதுபோன்ற சட்டத்தை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தபோது, சட்டத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை நிவர்த்தி செய்யுங்கள், அதன் பிறகு புதிய சட்டம் இயற்றுங்கள், அதற்கு தடையில்லை என்றுதான் நீதிபதிகள் உத்தரவிட்டார்கள். அதன்படி, சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று ஐகோர்ட்டு கூறியிருக்கிறது. ஆனால் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கவர்னர் கூறுகிறார். அரசியல் சாசனத்தின் 34-வது பிரிவின்படி, மாநில பட்டியலில் உள்ள பொது அமைதி, பொது சுகாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு, ‘பெட்டிங்’ மற்றும் சூதாட்டம் ஆகியவற்றை மையமாக வைத்துத்தான் சட்டம்  இயற்றினோம்.

ஆனால் கவர்னர் அதன் 31-வது பிரிவின்படி, ‘திறமைகளுக்கான விளையாட்டு’ என்று எடுத்துக்கொண்டு, அதில் சட்டம் இயற்ற முடியாது, அதிகாரம் இல்லை என்று கூறி அரசின் விளக்கத்தை நிராகரித்திருக்கிறார். அது ஏற்கக்கூடியது அல்ல. மோசடிக்கு வாய்ப்பு ஆன்லைன் (இணையவழி) விளையாட்டு, ஆப்லைன் (நேரடி) விளையாட்டு என்பதன் வித்தியாசத்தை ஏற்கனவே தெளிவுபடுத்தி இருக்கிறோம். அந்த மசோதா, ‘திறமைகளுக்கான விளையாட்டு’ என்பதற்கான சட்டம் இல்லை. திறமைகளுக்கான விளையாட்டு என்பது ஆட்கள் நேரடியாக அமர்ந்து விளையாடும் விளையாட்டு. நேரடியாக இருக்கும்போது யாரையும் யாரும் மோசடி செய்ய முடியாது. ஆன்லைன் விளையாட்டுக்காகத்தான் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டு என்பது ஒரு சார்பான முன்தயாரிப்போடு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படும் விளையாட்டு. ஆன்லைனில் எந்த சீட்டையும் மாற்றி மோசடி செய்ய முடியும். அதனால்தான் அதை தடை செய்ய அரசு முன் வந்தது. அதற்கான சட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிவிட்டார்.
மீண்டும் மசோதா எனவே, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி, ஒப்புதலுக்காக மீண்டும் கவர்னரிடம் அனுப்பி வைக்க வேண்டும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி அதை திருப்பி அனுப்புவோம். இதுபற்றி சட்டசபையில் மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும்போது, புதிய கருத்துகள் தெரிவிக்கப்பட்டால் அதை சேர்க்க வாய்ப்புள்ளது. ஆன்லைன், ஆப்லைன் சட்டத்தில் உள்ள விஷயங்களை எடுத்து திருப்பி திருப்பி அதையே கவர்னர் கேட்டிருக்கிறார். இதில் அரசு கோர்ட்டுக்கு போக வேண்டிய அவசியம் எழவில்லை. ஏனென்றால், இதில் சட்டம் இயற்றும் அதிகாரத்தை கோர்ட்டு ஏற்கனவே தந்துவிட்டது. அந்த சட்டத்தை இயற்றுவதற்கு முன்பு பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்தையும் அரசு கேட்டு பெற்றது. 95 சதவீத மக்களின் ஆதரவோடுதான் அந்த சட்டம் இயற்றப்பட்டது. கவர்னர் யார்? 2-வது முறையாக சட்டம் இயற்றி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும் போது அதை கவர்னர் நிராகரிக்க எந்த வாய்ப்பும் கிடையாது. இந்த மசோதா தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை எங்களிடம் விளக்கம் கேட்டனர். அதில் எங்கள் ஆட்சேபனைகளை தெளிவாக கூறி விட்டோம். மக்களை காப்பாற்றுவதற்காக கொண்டு வந்த சட்டம் அது. கண்துடைப்புக்காக கொண்டு வரவில்லை. நடைபெறவுள்ள சட்டசபை கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா மீண்டும் கொண்டு வரப்படும். 2-ம் முறையும் அதை கவர்னருக்கு அனுப்பி வைப்போம். அதையும் கிடப்பில் போட்டால் அப்போது பார்க்கலாம். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் கவர்னருக்கு முறையான விளக்கத்தை அரசு அளிக்கவில்லை என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறுவது பற்றி கேட்டால், அதற்கு எனது கேள்வி, இன்று கவர்னர் ரவியா? அண்ணாமலையா? எங்களிடம் அவர் கேட்ட விளக்கமும், நாங்கள் கொடுத்த விளக்கமும் அண்ணாமலைக்கு என்ன தெரியும்? ‘நான் இந்த விளக்கம் கேட்டேன், அதை அரசு தரவில்லை’ என்று அண்ணாமலையிடம் கவர்னர் கூறினாரா? இந்த ரகசியங்களை பற்றி அண்ணாமலையிடம் கவர்னர் ஆலோசித்து வருகிறாரா? கவர்னர் கேட்கும் விளக்கங்களை கொடுக்க நான் தயார். ரகசிய சந்திப்பு? சட்ட மசோதாவை நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த பிறகு இதுவரை 12 பேர் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக தற்கொலை செய்துவிட்டனர். இதற்கு யார் பொறுப்பு என்பதை நீங்கள் சொல்லுங்கள். இதுபற்றியும் சட்டசபையில் விவாதிப்போம். ஆன்லைன் சூதாட்டத்தினால் தமிழக அரசுக்கு எந்த வருமானமும் வரவில்லை. மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி. வருகிறது, அதனால் அந்த விளையாட்டை நிறுத்த மாட்டார்கள் என்று நீங்கள் கூறினால், அதுபற்றி நான் பேசக்கூடாது. அரசியல் சாசனம் 34-ம் பிரிவின்படி இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. அதை நாங்கள் செய்து காட்டுவோம். ஒருவர் மீது புகார் கொடுத்தால், புகாருக்கு ஆளானவரை யாரும் அழைப்பார்களா?. ஆனால் ஆன்லைன் விளையாட்டை நடத்துகிறவர்களை கவர்னர் ரகசியமாக சந்தித்ததாக ஒரு தகவல் உள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே அதை தடை செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்தில் அதை முன்மாதிரியாக செய்ய விரும்புகிறோம். மற்ற மாநிலங்களும் அதை தடை செய்யும்படி கேட்கிறோம். தெலுங்கானாவிலும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *