கோடை காலத்தில் மின்வெட்டு இருக்கக்கூடாது – மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

கோடை காலத்தில் மின்வெட்டு இல்லாதவகையில், மின்தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி, கோடை காலம் தொடங்குவதால் வெயில் அதிகரித்துள்ளது. அதனால், மின்சார தேவையும் உயர்ந்துள்ளது. இதை கருத்தில்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க மத்திய மின்துறை மந்திரி ஆர்.கே.சிங் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மின்சாரம், நிலக்கரி, ரெயில்வே ஆகிய அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், கோடை காலத்தில் மின்வெட்டு இல்லாதவகையில் பார்த்துக்கொள்ளுமாறு மின் உற்பத்தி நிறுவனங்களை ஆர்.கே.சிங் கேட்டுக்கொண்டார். கோடை காலத்தில் மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும் என்பதால், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்குமாறு வலியுறுத்தினார்.
பராமரிப்பு பணி அதன்படி, நிலக்கரியால் இயங்கும் மின்உற்பத்தி நிலையங்களில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளுமாறு மின்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு இறக்குமதி நிலக்கரியை பயன்படுத்தும் மின்உற்பத்தி நிலையங்கள், இம்மாதம் 16-ந் தேதியில் இருந்து தங்களது முழுதிறனை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போதுமான நிலக்கரி கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. நிலக்கரி கொண்டு செல்ல 418 பெட்டிகளை அளிக்க ரெயில்வே அமைச்சகம் சம்மதம் தெரிவித்துள்ளது. எரிவாயு மின்சாரம் இதுதவிர, கோடை காலத்தில் ஏற்படும் அதிகபட்ச மின்சார தேவையை பூர்த்தி செய்ய எரிவாயுவை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. எரிவாயு மூலம் 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். போதிய எரிவாயு வினியோகம் செய்வதாக ‘கெயில்’ நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இம்மாத இறுதியில் உற்பத்தியை தொடங்கும் புதிய நிலக்கரி மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மூலம் 2 ஆயிரத்து 920 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இந்த நடவடிக்கைகள் மூலம், கோடைகால மின்சார தேவை பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *