உக்ரைன் போர் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ரஷிய மாணவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனைக்கு வாய்ப்பு..!

உக்ரைன் போர் தொடர்பாக ரஷியாவுக்கு எதிராக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்ட மாணவியை வீட்டு சிறையில் வைத்தனர்.

மாஸ்கோ, – உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போரை, ரஷியர்களில் ஒரு தரப்பினரை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றனர். அப்படி எதிர்ப்பு தெரிவிப்பவர்களை அதிபர் புதின் தலைமையிலான அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. இந்த சூழலில் ரஷியாவின் ஆர்க்காங்கெல்ஸ்க் நகரை சேர்ந்த 20 வயதான பல்கலைக்கழக மாணவி ஒலேஸ்யா, உக்ரைன் போர் தொடர்பாக ரஷியாவுக்கு எதிராக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதோடு போரில் ரஷியாவை விமர்சிக்கும் வகையில் தனது நண்பர்கள் பதிவிட்ட பதிவுகளையும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இந்த விவகாரத்தில் ஒலேஸ்யாவை கைது செய்த போலீசார் அவரை வீட்டு சிறையில் வைத்தனர். மேலும் அவரது காலில் ‘எலக்ட்ரானிக் டேக்’ பொருத்தி அவரது ஒவ்வொரு அசைவுகளையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஒலேஸ்யா செல்போனில் பேசவும், இணையதளத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை நியாயப்படுத்தியதாகவும், ரஷிய ஆயுதப் படைகளை இழிவுபடுத்தியதாகவும் ஓலேஸ்யா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *