சுப்ரீம் கோர்ட்டில் 2 புதிய நீதிபதிகள் நாளை மறுநாள் பதவியேற்பு; முழு பலத்துடன் இயங்கும்

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால் மற்றும் அரவிந்த் குமார் நாளை மறுநாள் காலை பதவியேற்கின்றனர். புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் மொத்தமுள்ள 34 நீதிபதிகள் பணியிடங்களில் 27 இடங்கள் வரை நிரப்பப்பட்டு இருந்தன. வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக காலியாக மீதம் உள்ள 7 நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 13-ந்தேதி தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பதவி உயர்வு அளித்து நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி 5 நீதிபதிகளின் பெயர்களும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அது பரிசீலனை மேற்கொள்ளப்பட்டது. இதனையொட்டி கடந்த ஜனவரி 31-ந்தேதி கூடுதலாக 2 பெயர்களை சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரைத்தது.
இதன்படி, அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ராஜேஷ் பிண்டால் மற்றும் குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகிய இருவரது பெயர்களை பரிந்துரைத்து அவர்களை நியமிக்க கோரியிருந்தது. இந்த சூழலில் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் நியமன பரிந்துரைக்கு மத்திய அரசு கடந்த 4-ந்தேதி ஒப்புதல் அளித்தது. ஆனால், இந்த விசயத்தில் காலதாமதம் செய்வது ஏற்கத்தக்கதல்ல என சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை விடும் வகையில் தெரிவித்து இருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது. இதனை குறிப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மந்திரி ரிஜிஜூ, நாட்டில் தலைவர்கள் என்பவர் இந்த நாட்டின் மக்களே ஆவர். நாம் அனைவரும் சேவகர்கள். நமது தலைவர் பொதுமக்களே. நாட்டில் அரசியல் சாசனமே நமது வழிகாட்டியாகும். நாடு எப்படி நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் எப்படி விரும்புகிறார்களோ? அதன்படி நடக்க வேண்டும் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. நாட்டில் யாரும், யாருக்கும் எச்சரிக்கை விட முடியாது என கூறினார்.
இந்த சிறந்த தேசத்திற்கு, பணியாளர்களாக சேவை செய்வதற்கு நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என நாம் நம்மை சீர்தூக்கி பார்த்தோம் என்றால், அதுவே போதியது மற்றும் நன்மை பயக்கத்தக்கது என ரிஜிஜூ கூறினார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கினார். இதனை தொடர்ந்து, ஐகோர்ட்டின் தலைமை நீதிபதிகளாக பணியாற்றிய 3 பேர் உள்பட 5 நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 6-ந்தேதி பதவியேற்று கொண்டனர். நீதிபதிகள் 5 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முறைப்படி பதவி பிரமாணம் செய்து வைத்து உள்ளார். இதனால், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. மீதம் 2 இடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. அவற்றுக்கு சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரைத்து உள்ள அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ராஜேஷ் பிண்டால் மற்றும் குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகிய இருவரையும் நியமிக்கும் பட்சத்தில் சுப்ரீம் கோர்ட்டு முழு பலத்துடன் செயல்படும்.
இதற்கேற்ப, சுப்ரீம் கோர்ட்டில் மீதமுள்ள 2 புதிய நீதிபதிகள் காலியிடங்களை நிரப்புவது பற்றி மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ தனது டுவிட்டரில் நேற்று தகவல் வெளியிட்டார். அதில் புதிய நீதிபதிகள் நியமனம் பற்றி தெரிவித்து உள்ளார். இதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ராஜேஷ் பிண்தால் மற்றும் அரவிந்த் குமார் நாளை மறுநாள் (திங்கட் கிழமை) காலை 10.30 மணியளவில் பதவியேற்று கொள்கின்றனர். இதனால், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்பட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயரும். 9 மாத இடைவெளிக்கு பின்னர் முழு பலத்துடன் சுப்ரீம் கோர்ட்டு செயல்படும். நீதிபதி பிண்டால் வருகிற ஏப்ரலில் 62 வயது நிறைவு பெறுகிறார். இதனால், அவருக்கு 3 ஆண்டு பதவி காலம் மீதமுள்ளது. நீதிபதி அரவிந்த் குமாருக்கு வருகிற ஜூலையுடன் 61 வயது பூர்த்தியடைகிறது. ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உள்ளது. எனினும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 65 வயதுக்கு பின்னர் ஓய்வு பெறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *