புதுமைப்பெண் திட்டத்தின் 2-வது கட்டம் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

புதுமைப்பெண் திட்டத்தின் 2-வது கட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை,

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டின் நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாகிட புதுமை பெண் திட்டம் கொண்டு வரப்பட்டது. (5.9.2022) அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித் தொகை வழங்கும் “புதுமைப் பெண்” திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், பெண்களுக்கு உயர்கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல். பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.

புதுமைப் பெண் திட்டத்தின் முதற்கட்டத்தில் 1,16,342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் இடைநிற்றலில் இருந்து 12,000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வியில் சேர்ந்து பயனடைந்துள்ளனர். இந்த நிலையில், மேலும் 1.04,347 மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) தொடங்கி வைக்கிறார். திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடைபெறவுள்ள விழாவில், புதுமைப் பெண் திட்டத்தினை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அமைச்சர் கீதா ஜீவன், அமைச்சர் திரு. சா.மு.நாசர். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர், சமூக நலத்துறை இயக்குநர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *