தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்

தைப்பொங்கல்பண்டிகையைமுன்னிட்டு திருச்செந்தூரில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

கோவிலில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் தூத்துக்குடி திருச்செந்தூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாதயாத்திரை குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பாத யாத்திரை பக்தர்கள் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். ஏராளமான பக்தர்கள் பச்சை மற்றும் காவி நிற உடை அணிந்தும், பல அடி நீள அலகு குத்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட மினி லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் முருக பெருமானின் திருவுருவ படத்தை வைத்தும், அவரது திருப்புகழை பாடியும் பாத யாத்திரையாக வந்தனர். நீண்ட வரிசையில் நின்று தரிசனம் கோவிலில் குவிந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடினர். தொடர்ந்து இலவச பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனத்தில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர்கள் கோவில் கிரிபிரகாரத்தைச் சுற்றிலும் அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டனர். பெண்கள் அடிபிரதட்சணம் செய்து வழிபட்டனர்.
திருச்செந்தூருக்கு வரும் தூத்துக்குடி ரோடு, பாளையங்கோட்டை ரோடு, பரமன்குறிச்சி ரோடு, குலசேகரன்பட்டினம் ரோடு உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் சாரை சாரையாக பாத யாத்திரை பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூரில் காணும் இடமெல்லாம் முருக பக்தர்களாகவே காட்சி அளிப்பதால் விழாக்கோலம் பூண்டது. நாளை, தீர்த்தவாரி தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலையில் தை மாதப்பிறப்பு உத்திராயண புணணி்யகாலத்தை முன்னிட்டு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடைபெறுகிறது. மாலையில் சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெறும். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்நது விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் 3 மணியளவில் சுவாமி அலைவாயுகந்தபெருமான் பரிவேட்டைக்காக வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ரதவீதி சுற்றி, சன்னதி தெரு வழியாக கோவிலை சேர்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *