108 பயணிகளுடன் இலங்கையில் இருந்து சென்னை வந்த சொகுசு கப்பல் தாயகம் புறப்பட்டது
இலங்கை திரிகோணமலையில் இருந்து ‘எம்.வி.லே.சாம்ப்லேய்ன்’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் 108 பயணிகள் மற்றும் 118 குழுவினருடன் சென்னை துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் வந்தடைந்தது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு சென்னை துறைமுகம் வந்தடையும் முதல் சர்வதேச பயணிகள் கப்பல் இதுவாகும்.
இந்த கப்பலில் வந்த பயணிகள், சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம், சாந்தோம் தேவாலயம், மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவில் உள்பட பல்வேறு இடங்களை பார்வையிட்டனர். பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த பின்னர், இந்த சொகுசு கப்பல் அதன் தாயகமான இலங்கைக்கு நேற்று புறப்பட்டுச் சென்றது
இதுகுறித்து, சென்னை துறைமுக ஆணைய தலைவர் சுனில் பாலிவால் கூறும்போது, “சென்னை துறைமுகம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவில் சர்வதேச கப்பல் சுற்றுலாவை ஊக்குவிப்பதில் சென்னை துறைமுகத்தின் பங்கு முக்கியமானது. துறைமுகத்தின் மேம்பாட்டுக்கு மத்திய-மாநில அரசுகள், கப்பல் முகவர் நிறுவனங்கள் ஆகியவற்றின் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவுக்கு பிந்தைய காலக்கட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் நவீன சொகுசு கப்பலை ஈர்க்கும் விதமாக சென்னை துறைமுகம் மாற்றம் பெறும்” என்றார்.