சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியது – 70 நாட்கள் நடக்கிறது

இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக நடத்தப்படாமல் போனது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு 47-வது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தயாநிதிமாறன் எம்.பி., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவருமான டாக்டர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடக்க நிகழ்வாக, கண்காட்சியின் நுழைவுவாயில் பகுதியில் திருவாரூர் தேர், மாமல்லபுரம் கடற்கரை கோவில், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்தன. அவற்றை அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். அதன் பின்னர், தீவுத்திடல் வளாகத்தில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள டிரைவ்-இன் ரெஸ்டாரன்ட், டிரைவ்-இன் தியேட்டரும் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மேடையில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், மேயர், அதிகாரிகள் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

இந்த சுற்றுலா பொருட்காட்சி 70 நாட்கள் நடத்தப்பட இருக்கிறது. சுற்றுலா பொருட்காட்சியில் 27 அரசுத் துறைகள், 21 பொதுத் துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரசுத் துறையும் செயல்படுத்தும் திட்டங்கள், அவற்றின் மூலம் மக்கள் பெறும் பயன்கள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, 60 தனியார் அரங்குகளும், 125 சிறிய கடைகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பொழுது போக்கு விளையாட்டு பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. 32-க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியுடன் சுற்றிப்பார்க்கும் வகையில் சுற்றுலா பொருட்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

சிறுவர்களுக்கு ரெயில், பனிக்கட்டி உலகம், மீன் காட்சியகம், பேய்வீடு, 3டி தியேட்டர் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுவது போல, சென்னை தீவுத்திடலில் தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்திய நாட்டியத் திருவிழா தினமும் நடத்தப்பட உள்ளது என்று அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *