புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல்வேறு குற்றங்களுக்காக 932 வாகனங்கள் பறிமுதல்

சைலேந்திரபாபு அறிக்கை

போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைத்து மாநகரங்களிலும், மாவட்டங்களிலும் காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. தமிழகம் எங்கும், புத்தாண்டு கொண்டாட்டங்கள் எந்தவித அசம்பாவித சம்வங்களும், விபத்துகளும் இல்லாமல் சிறப்பாக நடந்து முடிந்தது.

மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கும், பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும் காவல்துறையின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில்…

சென்னையில் விபத்தில் உயிரிழப்பில்லா புத்தாண்டு கொண்டாட்டம், என்ற வாசகத்தை அடிப்படையாக வைத்தே பாதுகாப்பு பணிகள் மிகவும் தீவிரமாக இருந்தது. விபத்தில் உயிரிழப்பில்லா புத்தாண்டு கொண்டாட்டமாக சிறப்பாக நடந்து முடிந்தது, என்று போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்தார். கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு வாகன சோதனை நடத்தப்பட்டு, போதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை பாய்ந்தது. இதில் சென்னை போலீசார் சிறப்பாக செயல்பட்டனர், என்றும் போலீஸ் கமிஷனர் மேலும் தெரிவித்தார். போலீசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த சென்னை மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அவர் கூறினார்.

வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மது போதையில் வாகனங்களை ஓட்டிய குற்றத்திற்காக 360 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்றும், இதர குற்றங்களுக்காக 572 வாகனங்களும் ஆக மொத்தம் 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *