மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

வானிலை மாற்றம் மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சென்னை காசிமேட்டில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காசிமேடு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.

இந்தநிலையில் கார்த்திகை மாதம் முடிந்ததாலும், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற பெரும்பாலான விசைப்படகுகள் கரை திரும்பியதாலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று அதிகாலை முதலே காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை களை கட்டியது.

ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர் திருவொற்றியூர், பாரிமுனை, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அதேபோல் புறநகர் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன் விற்பனை செய்யும் வியாபாரிகளும் ஏலம் முறையில் மீன்களை வாங்க அதிகாலை முதலே வந்திருந்தனர்.

பெரிய வகை மீன்கள்

பெரிய வகை மீன்களான வஞ்சிரம், பாறை, சூரை, ஷீலா, வவ்வால், சிறிய வகை மீன்களான நெத்திலி, சங்கரா, நவரை உள்ளிட்ட மீன்கள் விற்பனைக்கு அதிகளவில் வந்தன. கடந்த ஒரு மாதமாக மீன் சாப்பிடாமல் இருந்த அசைவ பிரியர்கள் நேற்று மகிழ்ச்சியுடன் மீன்களை வாங்கிச் சென்றனர். குறிப்பாக பெரிய வகை மீன்களை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

டீசல் விலை உயர்வு காரணமாக காசிமேட்டில் இருந்து குறைந்த அளவு விசைப்படகுகள் மட்டுமே கடலுக்குள் மீன் பிடிக்க சென்றதால் மீன் வரத்து குறைந்து உள்ளது. இதனால் மீன்கள் விலை சற்று அதிகமாக காணப்பட்டது.

மீன்களின் விலை விவரம் (கிலோவில்) வருமாறு:-

வஞ்சிரம்-ரூ.700, வவ்வால்- ரூ.500, சூறை- ரூ.400, பாறை- ரூ.450, சங்கரா- ரூ.400, நெத்திலி- ரூ.200, கிழங்கா- ரூ.350, இறால்- ரூ.350, நண்டு- ரூ.400, கடம்பா- ரூ.380.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *