மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி 90 சதவீதத்தை எட்டியுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு நிறைவு மாநாடு நடந்தது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, மாநாட்டின் சிறப்பு இசை பாடல், நூற்றாண்டு நினைவு சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தொடக்கத்தில் கொரோனா தொற்று மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தினாலும், முதல்-அமைச்சர் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு மிகவும் திறமையாக கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி 96 சதவீதம் பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 92 சதவீத பேருக்கும் போடப்பட்டுள்ளது.

மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி 90 சதவீதத்தை எட்டியுள்ளது. யானைக்கால் நோயால் இதுவரை 8,023 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பொது மக்கள் நலனுக்காக முதல்-அமைச்சர் சமீபத்தில் 389 நடமாடும் மருத்துவ வாகனத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இந்த துறை இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆ.ர.ராகுல்நாத், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் டாக்டர் தி.சி.செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் (பொ) டாக்டர் வி.பி.ஹரிசுந்தரி, மருத்துவ கல்வி இயக்குனர் (பொ) டாக்டர் சாந்திமலர், எஸ்.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ. மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *