சுங்கத்துறை முதன்மை ஆணையருக்கு எதிரான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த தடை – ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை சுங்கத்துறையில் முதன்மை ஆணையராக பணியாற்றிவருபவர் எஸ்.ரவி செல்வம். இவர் மீது அதே துறையில் வேலைசெய்யும் பெண் அதிகாரி ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்களை விசாரிக்கும் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் விசாரணைக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ரவி செல்வம் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அந்த உத்தரவை எதிர்த்து ரவி செல்வம் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.ரவி, ‘பல லட்ச ரூபாய் சுங்கவரி ஏய்ப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்க தவறியது குறித்து விளக்கம் கேட்டு அந்த பெண் அதிகாரிக்கு கடந்த மே மாதம் 17-ந் தேதி மனுதாரர் ரவி செல்வம் குறிப்பாணை அனுப்பியுள்ளார். அதையடுத்து அதே மாதம் 24-ந் தேதி, மனுதாரருக்கு எதிராக அந்த பெண் அதிகாரி பாலியல் புகார் கொடுத்துள்ளார். இது உள்நோக்கத்துடன் கொடுக்கப்பட்ட பொய் புகார். இந்த புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ள 2 பேர், வரி ஏய்ப்பு தொடர்பாக அந்த பெண் அதிகாரியுடன் பணியாற்றியவர்கள். எனவே, இந்த குழுவின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகார்தாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுதாரருக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழுவின் விசாரணைக்கும், தனி நீதிபதி உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்தனர். வழக்கு விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *