தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பினர்: கடும் போக்குவரத்து நெரிசல்

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றிருந்த பொதுமக்கள், தீபாவளி முடிந்து நேற்று முன்தினம் முதல் மீண்டும் சென்னை திரும்பி வந்தனர். இதனால் நேற்று அதிகாலை முதல் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வெளியூரில் இருந்து சென்னை வந்த ஆம்னி பஸ்கள் வண்டலூர் பகுதியில் வெளிவட்ட சாலை வழியாக திருப்பிவிடப்பட்டதால் செங்கல்பட்டு-தாம்பரம் சாலையில் போக்குவரத்து சற்று குறைந்து இருந்தாலும், சிறப்பு பஸ்கள் அதிகளவு தாம்பரம் பகுதிக்கு இயக்கப்பட்டதால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெருங்களத்தூர் ரெயில் நிலைய சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் பெருங்களத்தூர் பஸ் நிலையம் அருகே பல மணிநேரம் நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதற்காக பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகில் மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரெயில்வே நிர்வாகம் இணைந்து ரூ.234 கோடியில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது. கொரோனாவால் பணிகள் பாதிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் பணிகள் வேகமெடுத்து, முதல்கட்டமாக ஜி.எஸ்.டி., சாலையில் செங்கல்பட்டு-தாம்பரம் வழித்தடத்தில் ஒருவழிப்பாதை மேம்பாலம் பணி முடிக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தை கடந்த மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

இதனால் நேற்று தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பிய பயணிகளால் பெருங்களத்தூர் பகுதியில் வழக்கமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைந்து இருந்தது. வண்டலூரில் இருந்து வரும் கார், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இந்த மேம்பாலம் வழியாக தாம்பரம் சென்றதால் பெருங்களத்தூர் பகுதியில் செங்கல்பட்டு-தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை.

ஆனால் மேம்பால பணிகள் நடைபெறாத தாம்பரம்-செங்கல்பட்டு ஜி.எஸ்.டி. சாலையில் சிறப்பு பஸ்கள்‌, பள்ளி, கல்லூரி வாகனங்கள், அலுவலகங்களுக்கு செல்லும் கார்கள் தாம்பரம் வழியாகவும், மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாகவும் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செங்கல்பட்டு நோக்கி வந்ததால் பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து வண்டலூர், செங்கல்பட்டு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் நீண்டநேரமாக பஸ்கள் கிடைக்காமல் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

எனவே அந்த பகுதியில் பணிகளை துரிதப்படுத்தி, விரைவில் மேம்பாலத்தை முழுமையாக கட்டி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறும்போது, “பெருங்களத்தூர் மேம்பால திட்டத்தில் புது பெருங்களத்தூர் சீனிவாசா நகர் வழியாக மேம்பாலம் இறங்கும் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. நெடுங்குன்றம் செல்லும் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன. ஜி.எஸ்.டி. சாலையில் செங்கல்பட்டு மார்க்கமாக ஒரு சில நிலங்களை கையகப்படுத்த வேண்டியுள்ளது. இந்த 3 பகுதிகளிலும் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்து மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்படும்” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *