கடத்திச் சென்று சொத்துகளை எழுதி வாங்கிய விவகாரம்: போலீஸ் அதிகாரிகள் மீதான வழக்கு

சென்னையைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரையும், இவரது காதலி, அம்மா உள்ளிட்டோரையும் கடத்திச் சென்று பல கோடி மதிப்புள்ள சொத்துகளை போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் எழுதி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சென்னை திருமங்கலம் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், இந்து மகா சபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

 

திருமங்கலம் உதவி கமிஷனர் சிவக்குமாருக்கு மட்டும் சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ராஜேசிடம் இருந்து எழுதிவாங்கிய சொத்தை மீண்டும் அவரது பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை விதித்து இருந்தது.

 

அதன்படி, ராஜேஷ் பெயருக்கு சொத்தை எழுதிக் கொடுத்துவிட்டதால், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உதவி போலீஸ் கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன் உள்பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

ஆனால், புகார்தாரர் ராஜேஷ், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘சென்னை மாநகர கூடுதல் போலீஸ் கமிஷனராக அப்போது இருந்த ஆர்.தினகரன் அலுவலகத்துக்கு என்னை போலீசார் அழைத்துச் சென்றனர். அவர் என் சொத்துகளை சிவா, சீனிவாச ராவ் பெயரில் எழுதிக்கொடுக்கவில்லை என்றால், எதை வேண்டுமானாலும் செய்வோம் என்று மிரட்டினார். அப்போது இன்ஸ்பெக்டர் சரவணன், கூடுதல் கமிஷனர் தெய்வம் போன்றோர், அவரை எதிர்த்து பேசக்கூடாது என்று எச்சரித்தனர். என் சொத்துகளை எழுதிவாங்கிய விவகாரத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

ஒரு வழக்கை போலீசார் முறையாக விசாரிக்கமாட்டார்கள் என்றோ, அந்த வழக்கில் உயர் போலீஸ் அதிகாரிகள் சமபந்தப்பட்டிருந்தாலோ, அவ்வழக்கை சி.பி.ஐ. போன்ற சுதந்திரமான புலன் விசாரணை அமைப்பின் விசாரணைக்கு ஐகோர்ட்டு மாற்றலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் கூறியுள்ளது. அதன்படி, நீதியை நிலைநாட்டுவது மட்டுமல்ல, மாநிலத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதுதான் சரியாக இருக்கும். எனவே, வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைக்க வேண்டும். அதன்பின்னர், 6 மாதங்களுக்குள் புலன் விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *