2-ம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டால் சென்டிரலில் இருந்து பரங்கிமலைக்கு நேரடியாக ரெயிலில் செல்ல முடியாது

சென்னையில் முதல் கட்டமாக திருவொற்றியூர்-விமானநிலையம் இடையே 33 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடத்திலும், சென்னை சென்டிரல் மெட்ரோவில் இருந்து பரங்கி மலை வரை 21 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2-வது வழித்தடத்திலும் சேர்த்து ஆக மொத்தம் 55 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 2-வது கட்டமாக 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.61 ஆயிரத்து 841 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் மெட்ரே ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இதில் 76.3 கிலோ மீட்டர் தூரம் உயர்த்தப்பட்ட பாதையும், 42.6 கிலோ மீட்டர் சுரங்கப்பாதையும் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

 

3-வது வழித்தடம் மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 4-வது வழித்தடம் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 5-வது வழித்தடம் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அமைக்கப்படுகிறது.

இதில் 5-வது வழித்தடமான மாதவரம் முதல் சோழிங்கநல்லுர் வரையிலான பாதை, ஏற்கனவே ரெயில்கள் இயக்கப்பட்டு வரும் 2-வது வழிப்பாதையான சென்டிரல் மெட்ரோ-பரங்கிமலை பாதையை கடந்து செல்கிறது. குறிப்பாக பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தை ஓட்டியே செல்வதால் இந்தப்பாதையை ரெயில்கள் கடந்து செல்லும் வகையில் பாதைக்கான பணிகள் நடக்கும் போது ரெயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்படும்.

இதனால் 5-வது வழிப்பாதைக்கான பணிகள் பரங்கிமலை ரெயில் நிலையம் அருகில் நடக்கும் போது சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரெயில் பரங்கிமலை வரை நேரடியாக செல்லாது. பரங்கிமலை செல்ல வேண்டிய பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இறங்கி பிளாட்பாரம் மாறி சென்று வேறு ரெயிலில் செல்ல வேண்டும். இந்த 5-வது வழிப்பாதை வருகிற 2026-ம் ஆண்டு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷெனாய் நகர் அல்லது அண்ணா நகரில் இருந்து பரங்கிமலை செல்லும் பயணிகள் கோயம்பேடு அல்லது ஆலந்தூரில் மாறி செல்ல வேண்டும். இதற்காக ஆலந்தூர் ரெயில் நிலையத்தை 2-வது வழித்தடத்திற்கு நிறுத்தும் நிலையமாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. தெற்கு புறநகர் பகுதிகளான மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் செல்லும் பாதையை தற்போது உள்ள முதலாவது வழிப்பாதையுடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் ஏற்கனவே முதல் மற்றும் 2-வது வழித்தடங்களில் செல்லும் ரெயில்களுக்கான பரிமாற்ற ரெயில் நிலையமாக உள்ளது. இதனுடன் 5-வது வழித்தடத்தில் முதலாவது மற்றும் 2-வது வழித்தடத்தை இணைக்கும் போது பயணிகள் விமான நிலையத்தை எளிதில் சென்றடைய முடியும்.

மேற்கண்ட தகவல்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *