அரசு பஸ்சின் மேற்கூரை மீது நடனமாடிய மாணவர்களால் பரபரப்பு
அரசு பஸ்களில் பயணம் செய்யக்கூடிய பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என போலீசாரால் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அலட்சியப்போக்கோடு ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்களை போலீசார் எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று கோயம்பேடு மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த அரசு மாநகர பஸ் ஒன்றில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் சிலர் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், பஸ்சின் மேற்கூரை மீது ஏறி நடனமாடியபடியும் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த காட்சிகளை அந்த பஸ்சின் பின்பகுதியில் வந்த மற்றொரு அரசு பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் தங்களது செல்போனில் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
எனவே ஆபத்தை உணராமல் அரசு பஸ்சில் தொங்கியபடியும் மேற்கூரையின் மீது நின்று கொண்டு நடனமாடியபடியும் சென்ற கல்லூரி மாணவர்கள் யார்? என்பது குறித்து கோயம்பேடு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.