வாலிபரை கைது செய்யக்கோரி மாநகர பஸ்களை நிறுத்தி டிரைவர், கண்டக்டர்கள் போராட்டம்

சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் இருந்து கண்ணதாசன் நகர் நோக்கி நேற்று மாலை மாநகர பஸ்(தடம் எண் 33 சி) சென்றது. பஸ்சை டிரைவர் சண்முகவேலு(வயது 59) ஓட்டினார். மண்ணடி அருகே கிளைவ் பேக்டரி இப்ராஹிம் சாலை வழியாக சென்றபோது பஸ்சில் பயணம் செய்த வாலிபருக்கும், டிரைவருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர், டிரைவர் சண்முகவேலுவை சரமாரியாக தாக்கினார். இதில் அவரது மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அந்த வாலிபர், பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து டிரைவர் சண்முகவேலு மற்றும் கண்டக்டர் ஆகியோர் பஸ்சை நடுவழியில் நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். இவர்களுக்கு ஆதரவாக அந்த வழியாக வந்த மற்ற மாநகர பஸ் டிரைவர், கண்டக்டர்களும் பஸ்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு டிரைவரை தாக்கிய வாலிபரை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த வடக்கு கடற்கரை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர், கண்டக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். டிரைவரை தாக்கிய வாலிபரை கைது செய்வதாக கூறியதால் போராட்டத்தை கைவிட்டு பஸ்களை இயக்கத்தொடங்கினர். டிரைவர் சண்முகவேலு சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *