37 பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமல்: சூடான ரவா கிச்சடி, சேமியா இனிப்பு வழங்கப்பட்டது

1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நேற்று முன்தினம் மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து இந்த திட்டம் பிற மாவட்டங்களில் நேற்று தொடங்கப்பட்டது. அந்த வகையில் 37 மாவட்டங்களில் குறிப்பிடப்பட்ட பள்ளிகளில் இந்த திட்டத்தை அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகள் தொடங்கிவைத்தனர்.

சென்னையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 37 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. இதன் மூலம் 5 ஆயிரத்து 941 மாணவ-மாணவிகள் பயன் பெற உள்ளனர்.

புயல் காப்பகம் தாழங்குப்பம் எண்ணூர், அன்னை சிவகாமிநகர் அம்மா உணவகம் எண்ணூர், சி.எம்.டி.ஏ. டிரக் டெர்மினல் பில்டிங் ஜி.என்.டி. சாலை மாதவரம், சென்னை தொடக்கப்பள்ளி டாக்டர் ராஜரத்தினம் நகர் கொடுங்கையூர், பெருநகர சென்னை மாநகராட்சி கட்டிடம் சிகரந்த பாளையம், சென்னை மாநகராட்சி பழைய கட்டிடம் எஸ்.என்.செட்டி தெரு ராயபுரம் ஆகிய 6 இடங்களில் தினமும் உணவுகள் தயாரிக்கப்பட்டு, 37 பள்ளிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது. தினமும் காலை 8.15 மணியில் இருந்து 8.50 மணிக்குள் மாணவர்கள் சாப்பிடும் வகையில் உணவுகளை குறித்த நேரத்தில் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை உப்புமா வகையும், செவ்வாய்க்கிழமை கிச்சடி வகையும், புதன்கிழமை பொங்கல் வகையும், வியாழக்கிழமை உப்புமா வகையும், வெள்ளிக்கிழமை கிச்சடியுடன் இனிப்பும் தயாரிக்கப்பட்டு காலை வேளைகளில் வழங்க இருக்கின்றனர். அந்த வகையில் நேற்று மாணவ-மாணவிகளுக்கு சூடான ரவா காய்கறி கிச்சடியும், சேமியா இனிப்பும் வழங்கப்பட்டது.

இதில் மாதவரம், ஜி.என்.டி.சாலை, சி.என்.டி.ஏ. டிரக் டெர்மினல் பில்டிங்கில் அமைக்கப்பட்டுள்ள மைய சமையல் கூடத்தில் இருந்து உணவு கொண்டு செல்லும் வினியோக வாகனத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இங்கிருந்து அதனை சுற்றியுள்ள 3 பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன.

அதில் ஒன்றான சென்னை தொடக்கப்பள்ளியில் அமைச்சர்கள், மேயர் மாணவர்களுக்கு உணவுகளை வழங்கி, அவர்களோடு அமர்ந்து சாப்பிட்டனர். அப்போது மேயர் ஆர்.பிரியா, மாணவர் ஒருவருக்கு உணவை ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.

உணவை சாப்பிட்ட மாணவர்களிடம் கேட்டபோது, “சூப்பரா இருந்துச்சு… வெறும் வயிற்றோடு நாங்கள் ஸ்கூலுக்கு வருவோம். இப்ப சாப்பாடு கொடுக்குறாங்க… சந்தோஷமா இருக்கு” என சிரித்தபடி கூறினர்.

மாணவர்களின் பெற்றோர் சிலர் கூறுகையில், ‘காலை உணவு திட்டம் வரவேற்கத்தக்க ஒன்று. இதன் மூலம் பிள்ளைகளை காலையில் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு அனுப்ப முடியும். 2 வேளை வயிறாற சாப்பிட்டு, படிப்பை நன்றாக கவனித்து, வீடு திரும்புகிறார்கள். இனி பிள்ளை சாப்பிட்டுச்சோ… சாப்பிடலையோ… என்ற கவலை இருக்காது’ என்றனர்.

அதேபோல் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார். பின்னர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் முன்னிலையில் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய அமைச்சர், மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகர் பள்ளியில் காலை உணவு திட்டத்தை கே.பி.சங்கர் எம்.எல்.ஏ.வும், திருவொற்றியூர் பூந்தோட்ட பள்ளியில் மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசும் தொடங்கி வைத்தனர்.

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் சில குறிப்பிட்ட பள்ளிகளில் முதற்கட்டமாக தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உணவுகள் சமைக்கப்பட்டு, அங்கிருந்து வாகனம் மூலம் வினியோகிக்கப்படுகின்றன.

அவ்வாறு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்படும் உணவுகள் பாதுகாப்புடன் பள்ளிகளுக்கு கொண்டு வரப்படுகிறது. எப்படியென்றால், உணவு சமைத்து பூட்டப்பட்ட கதவுகள் கொண்ட வாகனத்தில் ஏற்றி, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அனுப்பப்படுகிறது. சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்களிடம், பூட்டப்பட்ட கதவுக்கான மற்றொரு சாவி இருக்கும். பள்ளிக்கு வரும் அந்த வாகனத்தை தலைமை ஆசிரியர் மட்டும்தான் திறந்து உணவை வெளியில் எடுக்க முடியும். இதன் மூலம் உணவுகள் பாதுகாப்பாக சரியான நேரத்தில் கொண்டு வரப்படுகிறது.

மேலும் ‘ஹாட் பாக்ஸ்’சில் வைத்து உணவுகள் சூடாக கொண்டுவரப்பட்டு, சுடச்சுட மாணவர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இதற்காக மாணவர்களுக்கு தட்டுகளும், தண்ணீர் குடிக்க டம்ளர்களும் புதிதாக வாங்கி கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *