புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிந்ததும், கட்டுமான கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்;- கூடுதல் தலைமை செயலாளர்

ஆய்வு கூட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில், ஒவ்வொரு வார்டிற்கும் உட்பட்ட உதவி என்ஜினீயர்களிடம் தங்கள் வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளின் முன்னேற்றம் குறித்து கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விவரமாக கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்று வரும் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிவுற்றவுடன் அந்த மழை நீர் வடிகால்களில் உள்ள கட்டுமான கழிவுகளை உடனடியாக அகற்றுவதை அந்தந்த வார்டு உதவி என்ஜினீயர்கள் உறுதி செய்ய வேண்டும். இதேபோன்று ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளின் போது வண்டல்கள் அகற்றப்பட்டு அவை உடனடியாக அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வளாகங்களில் கொண்டு சேர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அதிகாரிகளுக்கு உத்தரவு

கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய 400 இடங்களில் மழைநீர் வெளியேற்றும் மின் மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் சேகரமாகும் கிணறுகளை தூர்வாரி வண்டல்களை அகற்றவும், மழைநீர் தேங்காமல் வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மோட்டார் பம்புகளை உடனடியாக முன் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அவற்றை இயக்கி சரிபார்த்துக் கொள்ளவும், அனைத்து வகையான உபகரணங்களையும் முன் பராமரிப்பு செய்து தயார் நிலையில் வைத்திருக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அனைத்து மழைநீர் வடிகால்களும் நீர்வரத்து கால்வாய்களில் சேரும் இடங்களில் (Disposal Point) தங்கு தடை இன்றி மழைநீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும் மழைக்காலங்களில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும், மாநகராட்சி மற்றும் இதர சேவை துறை அதிகாரிகள் தொடர்பு எண்கள் அடங்கிய கையேடை தயார் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *