393 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது – அமைச்சர்கள் வழங்கினர்

ஆசிரியர் தினத்தையொட்டி, தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடந்தது.

விழாவிற்கு மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பாக பணியாற்றிய 393 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர்.

விழாவில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:-

சில ஆட்சிகளில் சட்ட திட்டங்கள் மட்டுமே போடப்படும். அவை அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மட்டுமே உருவாக்க பயன்படும். ஆனால் நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டுள்ள சட்டதிட்டங்கள், பட்டம் படித்த பெண்களுக்கு உதவித்தொகை வழங்கி அவர்களுக்கு உந்து சக்தியாக மாறி இருக்கிறது. இந்த உலகம் ஆசிரியர்களை இன்னொரு பிரம்மாவாக பார்க்கிறது. அந்த ஆசிரியர்களுக்கு விருது அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளையும், எண்ணங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வைப்பார். தமிழகத்தை நிச்சயம் உன்னத நிலைக்கு கொண்டுவர அவர் அரும்பாடுபட்டு வருகிறார். அந்த முயற்சிகளுக்கு நாமும் உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

செப்டம்பர் 5-ந்தேதி என்ற இந்த நாளை கல்விக்குரிய நாளாகவே தமிழகம் மாற்றிவிட்டது. அந்தளவு புதிய திட்டங்கள் இன்றைக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆசிரியர்களை ஏங்க விட்டால் வகுப்பறைகள் தேங்கிவிடும் என்பதை நாங்கள் அறியாதவர்கள் அல்ல. இந்த விழாவில் பள்ளி கல்வித்துறைக்கு இயக்குனர் நியமிக்கப்பட வேண்டும் என்றும், குறிப்புகள் தயாரிக்கும் பணியில் இருந்து (நோட்ஸ் ஆப் லெசன்ஸ்) ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. நிச்சயம் இதனை முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம்.

ஆசிரியர்களுக்கு சுதந்திரம் தேவை. அதுதான் மாணவர்களுக்கு நன்மை பயக்கும் நடைமுறையாக இருக்கும் என்பதை நிச்சயம் அறிகிறோம். ஆசிரியர்கள் விடுக்கும் கோரிக்கையை படிப்படியாக தீர்த்துவைப்பதே இந்த அரசின் கடமை. இந்த நல்லாட்சியில் அது நிச்சயம் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயக்குனர் சுதன், தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் ஆர்.கஜலட்சுமி, இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு பணி அதிகாரி க.இளம்பகவத், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் லதா, மாநில வயது வந்தோர் – பள்ளிசாரா கல்வி இயக்கக இயக்குனர் குப்புசாமி, தொடக்கக்கல்வி இயக்ககத்தின் இயக்குனர் அறிவொளி, தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழக தலைவர் ஐ.லியோனி, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்கக இயக்குனர் கருப்பசாமி, அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் சேதுராமவர்மா உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *