புறநகர் பகுதியில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய மழை – விமான சேவைகள் பாதிப்பு

சென்னை புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. ேநற்று அதிகாலை வரை மழை நீடித்தது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.

 

மும்பையில் இருந்து 132 பயணிகளுடன் நள்ளிரவில் சென்னை வந்த பயணிகள் விமானம், கனமழையால் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதேபோல் புவனேஸ்வரில் இருந்து 117 பயணிகளுடன் வந்த விமானம், ஐதராபாத்தில் இருந்து 98 பயணிகளுடன் வந்த விமானம் ஆகியவை சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்டநேரம் வானிலேயே வட்டமடித்தபடி இருந்தன.மேலும் சென்னையில் இருந்து கொழும்புக்கு செல்ல வேண்டிய 2 விமானங்கள், தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்ல வேண்டிய ஒரு விமானம் என 3 விமானங்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக புறப்பட்டு சென்றன.

மழை ஓய்ந்து வானிலை சீரானதும் விமான சேவைகள் வழக்கம்போல் இயங்கின. மேலும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்ட விமானமும் சென்னைக்கு திரும்பி வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *