சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவருடைய மகள் லட்சுமிஸ்ரீ (வயது 17). இவர், குரோம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த மாநகர பஸ் மோதியது. இதில் பஸ் சக்கரத்தில் சிக்கிய மாணவி லட்சுமிஸ்ரீ பரிதாபமாக இறந்தார்.

அந்த சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளால்தான் விபத்து ஏற்பட்டு மாணவியின் உயிரை பறித்துவிட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை, தாம்பரம் மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து நேற்று போலீஸ் பாதுகாப்புடன் சென்று குரோம்பேட்டை ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினர்.

சாலையை ஆக்கிரமிப்பு செய்தபடி கடையின் முன்புறம் இருந்த அலங்கார முகப்பு, பெயர் பலகை உள்ளிட்டவைகளை அகற்றினர். பல இடங்களில் பட்டா உள்ள இடங்களை எப்படி இடிக்கலாம்? என கேட்டு அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர். எனினும் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர்.

அதேபோல் சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட நெற்குன்றத்தில் என்.டி.பட்டேல் சாலை, தாங்கல் கரை பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டி இருந்த 14 வீடுகள் மற்றும் ஒரு கடையை கோர்ட்டு உத்தரவின் பேரில் அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதம் செய்தனர். பெண் ஒருவர் தீக்குளிப்பேன் எனவும் மிரட்டினார். எனினும் ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *